இலவச சிலிண்டர் முதல், பேருந்து வரை! முதல்வர் விஜய்யின் மெகா அறிவிப்பு!

தமிழக சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் அதிரடியான பல மக்கள் நலத் திட்டங்களை அறிவித்து ஒட்டுமொத்த தேசத்தையும் தமிழகத்தின் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்துள்ளார்.

எளிய மற்றும் நடுத்தர வர்க்க மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், “அன்னபூரணி சூப்பர் சிக்ஸ்” (Annapoorani Super Six) என்ற புதிய திட்டத்தின் கீழ், தகுதியுள்ள குடும்பங்களுக்கு ஆண்டுக்கு மூன்று சமையல் எரிவாயு சிலிண்டர்கள் முற்றிலும் இலவசமாக வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

ஆண்டு வருமானம் 2.5 லட்ச ரூபாய்க்கும் குறைவாக உள்ள சுமார் ஒரு கோடியே 30 லட்சம் குடும்பங்கள் இந்தத் திட்டத்தின் மூலம் நேரடியாகப் பயனடைவார்கள். வரும் 2027-ஆம் ஆண்டு பொங்கல் திருநாள் முதல் இந்தத் திட்டம் நடைமுறைக்கு வரவுள்ளது.

இந்தத் திட்டத்தின் சிறப்பம்சம் என்னவென்றால், சிலிண்டர்களை நேரடியாக வழங்குவதற்குப் பதிலாக, அவற்றுக்கான முழுத் தொகையையும் பயனாளிகளின் வங்கி கணக்கிற்கே நேரடியாகச் செலுத்தும் ‘டிபிடி’ (DBT) முறை பின்பற்றப்பட உள்ளது.

வளைகுடா நாடுகளில் நிலவும் போர் பதற்றத்தால் எரிபொருள் விலை உயர்ந்து வரும் சூழலில், சாமானிய மக்களின் சுமையைக் குறைக்கத் தமிழக அரசு ஆண்டுக்குச் சுமார் 4,000 கோடி ரூபாய் கூடுதல் நிதியை இதற்காக ஒதுக்கீடு செய்துள்ளது.

அரசின் நிதி நெருக்கடிக்கு மத்தியிலும், மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவதில் தாங்கள் உறுதியாக இருப்பதாக முதலமைச்சர் விஜய் தனது உரையில் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

மற்றுமொரு மாபெரும் அறிவிப்பாக, பெண்களுக்கான “வெற்றி பயணத் திட்டம்” (Vettri Payana Thittam) விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

வரும் அக்டோபர் 2-ஆம் தேதி காந்தி ஜெயந்தி முதல், பெண்கள் சாதாரண பேருந்துகளில் மட்டுமல்லாமல், விரைவுப் பேருந்துகள் (Express), எல்.எஸ்.எஸ் (LSS) மற்றும் டீலக்ஸ் (Deluxe) பேருந்துகளிலும் மாவட்டங்களுக்கு இடையே தடையின்றி இலவசமாகப் பயணம் செய்யலாம்.

பெண்களின் பொருளாதாரச் சுதந்திரமே ஒரு குடும்பத்தின் முன்னேற்றத்திற்கு அஸ்திவாரம் என்று சுட்டிக்காட்டிய முதலமைச்சர், இந்தத் திட்டத்தில் வரலாற்றிலேயே முதன்முறையாகத் திருநங்கைகளையும் இணைத்து அவர்களுக்குப் பேருந்து பயணத்தை முற்றிலும் இலவசமாக்கியுள்ளார்.

இது சமூக நீதியை நிலைநாட்டும் ஒரு மிக முக்கியமான நகர்வாகப் பார்க்கப்படுகிறது. அதேபோல், விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு பரந்தூர் பசுமை விமான நிலையத் திட்டத்தில் தனது உறுதியான நிலைப்பாட்டை முதலமைச்சர் மீண்டும் பதிவு செய்துள்ளார்.

விளைநிலங்களையும், நீர்நிலைகளையும் அழித்து மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் எந்தவொரு திட்டத்தையும் தனது அரசு அனுமதிக்காது என்றும், இதற்காக மாற்று இடங்களைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார்.

இதற்கு மாற்றாக, சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் பயணிகள் வசதிக்காகப் புதிய ‘முனையம் 5’ (Terminal 5) அமைக்கப்படும் என்ற அறிவிப்பையும் அவர் வெளியிட்டுள்ளார்.

மக்கள் நலனுக்காகவும், மாநிலத்தின் வளர்ச்சிக்காகவும் முதலமைச்சர் விஜய் எடுத்துள்ள இந்த அடுத்தடுத்த அதிரடி நடவடிக்கைகள் தமிழக அரசியலில் ஒரு புதிய நம்பிக்கையை விதைத்துள்ளன.

Related News

Latest News