சாப்பாடு பில்லை கண்டு மிரண்டு போன ‘வாடிக்கையார்’! மன்னிப்பு கேட்ட நிறுவனம்!

பெங்களூருவில் உள்ள ஒரு பிரபல உணவகத்தில் வாடிக்கையாளர் ஒருவருக்கு வழங்கப்பட்ட பில், இப்போது இணையத்தில் மிகப்பெரிய விவாதத்தையும் பரபரப்பையும் கிளப்பியுள்ளது.

ரெடிட் (Reddit) சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ள தகவலின்படி,பெங்களூருவின் கோரமங்களா பகுதியில் உள்ள ‘சப்கோ’ (Subko) என்ற உணவகத்திற்குச் சென்ற ஒரு நபர், உணவுண்டு முடித்துவிட்டுத் தனக்கு வழங்கப்பட்ட ரசீதைப் பார்த்து உறையப் போயுள்ளார்.

அதில் அவருடைய பெயருக்குப் பதிலாக, அந்த உணவக ஊழியர்கள் அவரை அடையாளப்படுத்த “Little fat black shirt” என்று அச்சிட்டிருந்ததுதான் இந்தச் சர்ச்சைக்கும் மனவேதனைக்கும் மிக முக்கியக் காரணமாக அமைந்தது.

பொதுவாக ஒரு உணவகத்தில் வாடிக்கையாளர்களை அவர்களின் பெயர், அமர்ந்திருக்கும் மேசை எண் அல்லது அவர்கள் ஆர்டர் செய்த உணவு விவரங்களை வைத்துத்தான் அடையாளப்படுத்துவார்கள்.

ஆனால், ஒரு மனிதனின் உடல் அமைப்பை வைத்தும், அவரது நிறம் மற்றும் உடையை வைத்தும் இழிவுபடுத்தும் விதமாக ரசீதில் அச்சிட்டது அநாகரீகத்தின் உச்சம் என்று பாதிக்கப்பட்ட அந்த நபர் தனது ரெடிட் பதிவில் குமுறியுள்ளார்.

இது ஒரு நகைச்சுவைக்காகச் செய்யப்பட்டது என்று எளிதாகக் கடந்து போய்விட முடியாது என்றும், ஒரு ஆணின் உருவத்தைக் கேலி செய்வது மட்டும் எப்படிச் சரியாக இருக்கும் என்றும் அவர் ஆவேசமாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்தப் பதிவு சமூக வலைதளங்களில் காட்டுத்தீ போலப் பரவிய நிலையில், அந்த உணவகத்திற்கு எதிராகக் கண்டனக் குரல்கள் வலுத்தன.

நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த சப்கோ காபி ரோஸ்டர்ஸ் நிறுவனம், தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்தப் புகாருக்குப் பகிரங்கமாக மன்னிப்பு கோரியுள்ளது.

“சில விஷயங்களை ரகசியமாகச் சரி செய்யலாம், ஆனால் சிலவற்றை உலகறியச் சத்தமாகச் சொல்லிச் சரி செய்ய வேண்டும்.

ஏனென்றால், இத்தகைய தவறுகளைக் கண்டு நாம் மௌனமாக இருப்பதுதான், அந்தத் தவறான கலாச்சாரம் தொடர்ந்து நீடிக்கக் காரணமாகிவிடும்” என்று அந்த நிறுவனம் நேர்மையாக ஒப்புக்கொண்டுள்ளது.

உருவக் கேலி (Body Shaming) என்பது எக்காரணத்தைக் கொண்டும், எந்தச் சூழலிலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என்றும், இதில் யாருக்கும் எவ்வித விதிவிலக்கும் கிடையாது என்றும் அந்த நிறுவனம் தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தியுள்ளது.

பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர் தங்களின் உட்புறப் புகார் தீர்க்கும் பிரிவைத் தொடர்பு கொள்ளலாம் என்றும், தவறு செய்த ஊழியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்த நிறுவனம் உறுதியளித்துள்ளது.

இருப்பினும், சேவைத் துறையில் இருக்கும் பணியாளர்கள் வாடிக்கையாளர்களை எவ்வளவு மரியாதையுடன் நடத்த வேண்டும் என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு கசப்பான பாடமாக அமைந்துள்ளது.

ஒரு சிறிய வாசகம் ஒரு மனிதனின் மனதை எவ்வளவு காயப்படுத்தும் என்பதையும், டிஜிட்டல் உலகில் ஒரு சிறு தவறு ஒரு நிறுவனத்தின் பெயரையே எப்படிச் சிதைக்கும் என்பதையும் இந்த பெங்களூரு உணவகச் சம்பவம் உலகிற்கு உணர்த்தியுள்ளது.

Related News

Latest News