விண்வெளித் துறையில், இந்தியா, பல சாதனைகளைப் படைத்து, உலக அரங்கில், தனது கொடியை நாட்டி வந்தாலும், ஒரு அதிர்ச்சியூட்டும் தகவல், இப்போது வெளியாகியுள்ளது.
கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் மற்றும் இத்தாலியின் பாலிடெக்னிக் டி டொரினோ (Politecnico di Torino – PoliTO)ஆகியவற்றின் பொருளாதார நிபுணர்கள் இணைந்து வெளியிட்டுள்ள ஒரு ஆய்வறிக்கையின்படி, பூமியின் தாழ்வட்டப் பாதைக்கு (Low Earth Orbit), ஒரு கிலோகிராம் எடையுள்ள செயற்கைக்கோளை அனுப்ப, உலகிலேயே, இந்தியாதான், அதிக செலவு செய்வதாகக் கூறப்படுகிறது.
இந்த ஆய்வு, 1960 முதல் 2025-ஆம் ஆண்டு வரை, உலகெங்கிலும் நடத்தப்பட்ட, 6,740-க்கும் மேற்பட்ட ராக்கெட் ஏவுதல்களை, விரிவாகப் பகுப்பாய்வு செய்துள்ளது.
2025-ஆம் ஆண்டில், ஒரு கிலோகிராம் எடையை, தாழ்வட்டப் பாதைக்கு அனுப்ப, உலகளாவிய சராசரி செலவு, 3.71 லட்சம் ரூபாயாக இருந்தது. ஆனால், இந்தியாவின் செலவோ, 12.77 லட்சம் ரூபாயாக இருந்தது.
இது, உலக சராசரியை விட, மூன்று மடங்கிற்கும் அதிகமாகும்.
அதே நேரத்தில், அமெரிக்காவின் செலவு, 3.10 லட்சம் ரூபாயாகவும், ஜப்பானின் செலவு, 5.08 லட்சம் ரூபாயாகவும், சீனாவின் செலவு, 5.58 லட்சம் ரூபாயாகவும், ரஷ்யாவின் செலவு, 6.41 லட்சம் ரூபாயாகவும், மற்றும் ஐரோப்பாவின் செலவு, 9.50 லட்சம் ரூபாயாகவும் இருந்தது.
குறைந்த செலவில், விண்வெளிக்குச் செயற்கைக்கோள்களை அனுப்பும் நாடு என்ற, இந்தியாவின் பெருமைக்கு, இந்தக் கருத்து, முரணாகத் தெரிகிறது. ஆனால், இதற்கான காரணத்தையும், அந்த ஆய்வாளர்கள் விளக்கியுள்ளனர்.
இந்திய ராக்கெட்டுகள், பொதுவாக, குறைந்த எடையுள்ள செயற்கைக்கோள்களையே, சுமந்து செல்கின்றன. ஆனால், ஒரு ராக்கெட்டை ஏவுவதற்கான நிலையான செலவுகள், அதிகமாகவே இருக்கின்றன.
இந்த மொத்தச் செலவையும், குறைந்த கிலோகிராம் எடையுடன் வகுக்கும்போது, ஒரு கிலோகிராமிற்கான செலவு, அதிகமாகக் காணப்படுகிறது.
மாறாக, அமெரிக்காவில், ஸ்பேஸ்எக்ஸ் போன்ற நிறுவனங்கள், மீண்டும் பயன்படுத்தக்கூடிய ராக்கெட்டுகளைப் பயன்படுத்துவதாலும், அதிக எண்ணிக்கையிலான ஏவுதல்களை நடத்துவதாலும், ஒரு கிலோகிராமிற்கான செலவு, மிகவும் குறைவாக உள்ளது.
ஆக, இந்தியாவின் விண்வெளித் திட்டம், மிகவும் செலவு குறைந்ததாகப் பார்க்கப்பட்டாலும், ஒரு கிலோகிராமிற்கான செலவைக் குறைப்பதற்கு, அதிக எடை கொண்ட செயற்கைக்கோள்களைச் சுமந்து செல்லும் ராக்கெட்டுகளையும், மீண்டும் பயன்படுத்தக்கூடிய ராக்கெட் தொழில்நுட்பத்தையும், இந்தியா, விரைந்து மேம்படுத்த வேண்டும் என்பதையே, இந்த ஆய்வு, சுட்டிக்காட்டுகிறது.
