தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருவது நடுத்தர மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆடி மாதம் முடிந்து சுபமுகூர்த்தங்கள் நிறைந்த ஆவணி மாதம் தொடங்கியுள்ள நிலையில், தங்கத்திற்கான தேவை அதிகரிக்கும் என்பதால் விலை மேலும் உயரும் என எதிர்பார்க்கப்பட்டது.
அதன்படி, கடந்த சில நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. நேற்று முன்தினம் காலை சற்று குறைந்திருந்த தங்கம், மாலையில் திடீரென உயர்ந்தது. கிராமுக்கு ரூ.195 அதிகரித்து ரூ.14,400-க்கும், சவரனுக்கு ரூ.1,560 உயர்ந்து ரூ.1,15,200-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
தொடர்ந்து நேற்று தங்கம் விலை மீண்டும் அதிகரித்தது. கிராமுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.14,600-க்கும், சவரனுக்கு ரூ.1,600 அதிகரித்து ரூ.1,16,800-க்கும் விற்பனையானது.
இந்த நிலையில், இன்று காலையும் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது. கிராமுக்கு ரூ.110 அதிகரித்து ரூ.14,710-க்கும், சவரனுக்கு ரூ.880 உயர்ந்து ரூ.1,17,680-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதையடுத்து மீண்டும் விலை ஜெட் வேகத்தில் உயர்ந்துள்ளது. கிராமுக்கு மேலும் ரூ.140 அதிகரித்து ரூ.14,850-க்கும், சவரனுக்கு ரூ.1,120 உயர்ந்து ரூ.1,18,800-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,000 வரை விலை உயர்ந்துள்ளதால், நகை வாங்க திட்டமிட்டிருந்த இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதனிடையே வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.5 அதிகரித்து ரூ.270-க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.2.70 லட்சத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
