‘சென்னை’ எப்படி உருவானது? நீங்கள் அறியாத ரகசியங்கள்!

ஒவ்வொரு ஆண்டும், ஆகஸ்ட் 22-ஆம் தேதி, ‘மெட்ராஸ் டே’ (Madras Day), அதாவது சென்னை தினம், கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. இது, வெறும் ஒரு கொண்டாட்டம் அல்ல; இது, ஒரு நகரத்தின் 387 ஆண்டுகால நெடிய வரலாற்றையும், அதன் பாரம்பரியத்தையும், கலாச்சாரத்தையும் திரும்பிப் பார்க்கும் ஒரு பெருமிதமான தருணம். இன்று, உலகின் முக்கிய நகரங்களில் ஒன்றாகத் திகழும் சென்னை, ஒருகாலத்தில், ஒரு சிறிய மீன்பிடி கிராமமாக இருந்தது என்ற வரலாறு, பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தும்.

1639-ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 22-ஆம் தேதி… கிழக்கிந்திய கம்பெனியின் பிரான்சிஸ் டே (Francis Day) மற்றும் ஆண்ட்ரூ கோகன் (Andrew Cogan), உள்ளூர் ஆட்சியாளரான தமர்லா வெங்கடாத்ரி நாயக்கரைச்(Damarla Chennapa Nayaka) சந்திக்கின்றனர். அவர்கள் கேட்டது, வர்த்தகம் செய்ய, ஒரு சிறிய நிலப்பகுதி. ஆனால், அவர்கள் ஏன் இந்த இடத்தை தேர்ந்தெடுத்தார்கள் தெரியுமா? காரணம், கூவம் ஆறு. அன்று, அது, நன்னீர் ஓடும் ஒரு புனித நதியாக இருந்தது. கப்பல்கள் வந்து செல்ல, இதுவே சிறந்த இடம் என்று அவர்கள் நம்பினர். வெறும் மூன்று மைல் நீளமுள்ள அந்த ‘மதராசப்பட்டினம்’ என்ற மணல் திட்டுதான், இன்றைய நவீன சென்னையின் தொடக்கப்புள்ளி.

புனித ஜார்ஜ் கோட்டையை மையமாகக் கொண்டு, நகரம் மெல்ல வளரத் தொடங்கியது. கோட்டைக்குள், ஆங்கிலேயர்கள் வாழ்ந்த பகுதி, ‘ஒயிட் டவுன்’ (White Town) என்றும், கோட்டைக்கு வெளியே, இந்தியர்கள் வாழ்ந்த பகுதி, ‘பிளாக் டவுன்’ (Black Town) என்றும் அழைக்கப்பட்டது. அந்த ‘பிளாக் டவுன்’தான், இன்றைய ஜார்ஜ் டவுன். காலப்போக்கில், இந்த இரண்டு நகரங்களும் இணைந்து, ‘மெட்ராஸ்’ என்ற ஒரு மாபெரும் மாகாணமாக உருவெடுத்தது.

சுதந்திரத்திற்குப் பிறகு, மெட்ராஸ் மாகாணம், ‘மெட்ராஸ் மாநிலமாக’ மாறியது. பின்னர், மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது, ‘மெட்ராஸ் மாநிலம்’ என்பதை, ‘தமிழ்நாடு’ என்று பெயர் மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை, வலுவாக எழுந்தது. தியாகி சங்கரலிங்கனார், இதற்காக உண்ணாநோன்பிருந்து, தன் உயிரையே தியாகம் செய்தார். அதன் விளைவாக, 1969-ஆம் ஆண்டு, ஜனவரி 14-ஆம் தேதி, மெட்ராஸ் மாநிலம், ‘தமிழ்நாடு’ என்று அதிகாரப்பூர்வமாகப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. அதன்பிறகு, 1996-ஆம் ஆண்டு, ஜூலை 17-ஆம் தேதி, ‘மெட்ராஸ்’ என்ற பெயர், ‘சென்னை’ என்று மாற்றப்பட்டது.

சென்னையின் ஒவ்வொரு கல்லும் ஒரு கதையைச் சொல்லும். லண்டனுக்கு அடுத்தபடியாக, உலகின் இரண்டாவது மிகப் பழமையான நகராட்சி மன்றம் (Municipal Corporation) உருவானது நமது சென்னையில்தான் என்பது பலரும் அறியாத உண்மை. அதேபோல், “தென் இந்தியாவின் முதல் ரயில் நிலையம் ராயபுரத்தில் தான் 1856-இல் கம்பீரமாக எழும்பியது. ஒரு காலத்தில் அமெரிக்காவின் மாசச்சூசெட்ஸ் மாகாணத்திலிருந்து ராட்சத பனிக்கட்டிகள் கப்பல் வழியாகச் சென்னைக்குக் கொண்டு வரப்பட்டு, மெரினாவில் உள்ள ‘ஐஸ் ஹவுஸ்’ எனப்படும் விவேகானந்தர் இல்லத்தில் சேமிக்கப்பட்டன. அந்த வெயிலிலும் குளிர்ச்சியை அனுபவித்த பெருமை நம் சென்னைக்கே உண்டு. இன்று உலகப்புகழ் பெற்ற ‘சிக்கன் 65’ பிறந்த இடமும் நமது சென்னைதான்; 1965-ஆம் ஆண்டு புகாரி உணவகத்தில் இது முதன்முதலாக அறிமுகப்படுத்தப்பட்டது.

இன்று சென்னை என்பது வெறும் ஒரு பெயரல்ல, அது கோடிக்கணக்கான மக்களின் உணர்வு. கர்நாடக இசை மற்றும் பரதநாட்டியத்தின் தலைநகராகத் திகழும் சென்னை, அதேசமயம் ஆசியாவின் டெட்ராய்ட் என்று அழைக்கப்படும் அளவிற்கு வாகன உற்பத்தியிலும், சர்வதேசத் தரம் வாய்ந்த மருத்துவச் சேவைகளிலும் முதன்மை பெற்று விளங்குகிறது. மெரினா கடற்கரையின் அலைகள் சொல்லும் கதைகள் முதல், தி நகரின் பரபரப்பான வணிக வீதிகள் வரை சென்னையின் ஒவ்வொரு இடமும் ஒரு தனித்துவமான வரலாற்றைத் தன்னுள் புதைத்து வைத்துள்ளது. பழமை மாறாத கலாச்சாரத்தையும், நவீனத் தொழில்நுட்பத்தின் வேகத்தையும் ஒருசேரக் கொண்டுள்ள இந்த நகரம், உலக வரைபடத்தில் தவிர்க்க முடியாத ஒரு சக்தியாகத் திகழ்கிறது.387 ஆண்டுகளைக் கடந்த போதிலும், இன்றும் பல ஆயிரம் இளைஞர்களின் கனவு நகரமாகத் திகழும் சென்னை, தன்னைத் தேடி வருபவர்களை வாழ வைக்கும் ஒரு அன்னையாகவே பார்க்கப்படுகிறது.

Related News

Latest News