சர்க்கரை விலை இனி குறையுமா? மத்திய அரசு எடுத்த அதிரடி முடிவு!

இந்தியாவில் பண்டிகை காலம் தொடங்கியுள்ள நிலையில், நாடு முழுவதும் சர்க்கரைக்கான தேவை அதிகரித்துள்ளது. ஆனால் சர்க்கரை உற்பத்தியில் பயன்படுத்தப்படும் கரும்பின் ஒரு பகுதி எத்தனால் தயாரிப்புக்கு திருப்பிவிடப்படுவதால், சர்க்கரை உற்பத்தி குறைந்து சப்ளை-டிமாண்ட் இடையே சமநிலையின்மை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சர்க்கரை விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

விலையை கட்டுப்படுத்தவும், உள்நாட்டு சந்தையில் போதுமான இருப்பை உறுதி செய்யவும் மத்திய அரசு நீண்ட இடைவெளிக்குப் பிறகு சர்க்கரை இறக்குமதிக்கு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, சுமார் 10 லட்சம் டன் சர்க்கரையை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை மூலம் உடனடியாக சந்தையில் சர்க்கரை தட்டுப்பாடு குறைவதுடன், விலை கட்டுக்குள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், எத்தனால் உற்பத்தி மற்றும் உள்நாட்டு சர்க்கரை தேவைக்கு இடையே சமநிலையை ஏற்படுத்தும் வகையில், செப்டம்பர் 30, 2026 வரை சர்க்கரை ஏற்றுமதிக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இறக்குமதி செய்யப்படும் சர்க்கரை மூலம் அடுத்த சில மாதங்களில் சந்தை நிலைமை சீராகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே, இறக்குமதி அறிவிப்பு சர்க்கரை நிறுவனங்களின் பங்குகளில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. டால்மியா பாரத் சுகர் பங்கு 5.47%, துவாரகேஷ் சுகர் 4.32%, பல்ராம்பூர் சீனி மில்ஸ் 4.15%, திரிவேணி இன்ஜினியரிங் 3.82%, EID பாரி 2.22% வரை சரிந்தன. இதனால் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Related News

Latest News