சட்டசபையில் முதலமைச்சர் விஜய் அறிவித்த எம்.எல்.ஏ.க்களுக்கான கார்களை திமுக எம்.எல்.ஏ.க்கள் பெற மாட்டார்கள் என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழ்நாடு அரசின் நிதி நிலைமையை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இதுகுறித்து பேசிய உதயநிதி ஸ்டாலின், திமுகவைச் சேர்ந்த 59 எம்.எல்.ஏ.க்களும் கார்களை பெறமாட்டார்கள் என்றும், பொருளாதார ரீதியாக நலிவடைந்த அல்லது கார் இல்லாத எம்.எல்.ஏ.க்களுக்கு மட்டும் கார் வழங்கலாம் என்றும் கூறினார். இதற்கான கையெழுத்திடப்பட்ட கடிதங்களை சபாநாயகரிடம் வழங்குவதாகவும் தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, அனைத்து எம்.எல்.ஏ.க்களும் சமம் என்ற அடிப்படையிலேயே முதலமைச்சர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக கூறினார். மக்களை நேரில் சந்திக்க எம்.எல்.ஏ.க்களுக்கு கார் தேவைப்படுவதாகவும், ஏற்கனவே கார் வைத்திருப்பவர்கள் விண்ணப்பிக்க வேண்டிய அவசியமில்லை என்றும் தெரிவித்தார்.
மேலும், உதயநிதி அரசு பங்களாவில் வசிப்பது குறித்தும் ஆதவ் அர்ஜூனா கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு, எதிர்க்கட்சித் தலைவருக்கு அமைச்சருக்கு இணையான அந்தஸ்து இருப்பதால் அரசு வீடு வழங்கப்படுவதாக விளக்கம் அளித்தார்.
கார் வேண்டாம் என்ற திமுகவின் நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்திய அவர், இதுதொடர்பான விவாதத்தின்போது ஆளும் தரப்புக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதால் சட்டசபையில் சலசலப்பு நிலவியது.
