தமிழக அரசு ஊழியர்களுக்கு முக்கிய செய்தி! முதலமைச்சர் விஜய்யின் அதிரடி அறிவிப்பு!

தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியைத் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. குறிப்பாக, பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள் அல்லது பணியில் இருக்கும்போது உயிரிழந்த அரசு ஊழியர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் இடைக்கால நிவாரணத் தொகையில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தைப் முதலமைச்சர் விஜய்யின் தலைமையிலான அரசு அறிவித்துள்ளது.

இந்தத் திட்டத்தின் கீழ் தகுதியான பயனாளிகளுக்கு வழங்கப்பட்டு வரும் இடைக்கால மாத ஊதியத்திற்கான அகவிலைப்படியை 60 சதவீதமாக உயர்த்தித் தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இது பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குப் பொருளாதார ரீதியாக ஒரு மிகப்பெரிய நிம்மதியைத் தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த புதிய உத்தரவின் நுணுக்கங்களை நாம் கவனித்தால், பொதுவாக ஒரு அரசு ஊழியர் பணியில் இருக்கும்போது உயிரிழக்க நேரிட்டால், அவரது குடும்பத்தினருக்கு ஒரு குறிப்பிட்டத் தொகை இடைக்கால நிவாரணமாக வழங்கப்படுகிறது.

இது ஊழியர் கடைசியாகப் பெற்ற அடிப்படை ஊதியத்தில் 30 சதவீதம் அல்லது குறைந்தபட்சம் 10 ஆயிரம் ரூபாய் என்ற அளவில் இருக்கும். இந்தத் தொகையுடன் சேர்த்து வழங்கப்பட்டு வந்த அகவிலைப்படியைத்தான் தற்போது ஒரே சீராக 60 சதவீதமாக உயர்த்தி அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்த உயர்வு, கடந்த 2026-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி முதல் முன் தேதியிட்டு நடைமுறைக்கு வரும் என அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 6-வது மற்றும் 7-வது ஊதியக் குழுவின் கீழ் வருபவர்களுக்கான ஊதிய விகிதங்களிலும் தெளிவான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன.

6-வது ஊதியக் குழுவின் கீழ் கடைசியாக ஊதியம் பெற்றவர்களுக்கு அகவிலைப்படியானது 262 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஒருவேளை, ஒரு ஊழியரின் அடிப்படை ஊதியம் 10 ஆயிரம் ரூபாய்க்குக் குறைவாக இருந்தால், அது குறைந்தபட்சம் 10 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டு, அதன் பிறகு அகவிலைப்படி கணக்கிடப்படும். 7-வது ஊதியக் குழுவின் கீழ் இன்னும் ஊதியம் நிர்ணயிக்கப்படாதவர்களுக்கும் இந்த 10 ஆயிரம் ரூபாய் குறைந்தபட்ச வரம்பு பொருந்தும் என அரசு தெளிவுபடுத்தியுள்ளது.

இந்த மாற்றங்கள் அனைத்தும் எந்தவிதத் தாமதமுமின்றி உரியப் பயனாளிகளுக்குச் சென்றடைவதை உறுதி செய்யுமாறு கருவூலம் மற்றும் கணக்குத் துறை ஆணையருக்குத் தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. இதற்கான நிதி ஒதுக்கீடு மற்றும் கணக்கீட்டுப் பணிகளைத் துரிதப்படுத்துமாறு அனைத்து மாவட்ட கருவூல அதிகாரிகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

அரசு ஊழியர்களின் நலனைப் பாதுகாப்பதிலும், அவர்களின் குடும்பத்தின் சமூகப் பாதுகாப்பை உறுதி செய்வதிலும் இந்த அதிரடி நடவடிக்கை ஒரு மிக முக்கியமான மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது. தமிழக அரசின் இந்தச் செயலை அரசு ஊழியர் சங்கங்கள் மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.

Related News

Latest News