மாதச் சம்பளக்காரர்களுக்கு எதிர்கால சேமிப்பில் முக்கிய பங்கு வகிப்பது EPF எனப்படும் பிஎஃப் தொகையாகும். சம்பளம் கிடைக்கும் முன்பே பிடித்தம் செய்யப்படுவதால், பல குடும்பங்களுக்கு இது கட்டாய சேமிப்பாக உள்ளது.
எனவே EPF கணக்கில் உள்ள விவரங்களை சரியாக பராமரிப்பது மிகவும் அவசியம். குறிப்பாக, வேலையில் சேர்ந்த தேதி (Date of Joining – DOJ) மற்றும் வேலையிலிருந்து விலகிய தேதி (Date of Exit – DOE) ஆகியவை சரியாக பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதை ஊழியர்கள் சரிபார்க்க வேண்டும்.
DOJ தவறாக பதிவானால், உண்மையில் பணிபுரிந்த காலம் குறைவாகக் கணக்கிடப்படலாம். இதனால் சேவை காலம் மற்றும் வட்டி கணக்கீட்டில் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.
அதேபோல், DOE சரியாக பதிவு செய்யப்படவில்லை என்றால் புதிய நிறுவனத்திற்கு PF தொகையை மாற்றுவதிலும், PF பணத்தை பெறுவதிலும் தாமதம் ஏற்படலாம்.
குறிப்பாக EPS ஓய்வூதியத்திற்கு தேவையான 10 ஆண்டு சேவை காலத்தை கணக்கிடும்போது, தவறான தேதிகள் சிக்கலை ஏற்படுத்தக்கூடும்.
மேலும், தவறான தேதிகள் காரணமாக பணிக்காலத்தில் இடைவெளி இருப்பது போன்ற முரண்பாடுகளும் ஏற்படலாம். எனவே வேலை மாறும்போதும், விலகும்போதும் EPFO கணக்கை சரிபார்ப்பது அவசியம்.
ஆதார் இணைக்கப்பட்ட UAN கணக்கு வைத்திருப்பவர்கள், குறிப்பிட்ட விதிமுறைகளின்படி DOE தேதியை ஆன்லைனில் புதுப்பிக்க முடியும். EPF கணக்கை அவ்வப்போது சரிபார்ப்பது எதிர்கால சிக்கல்களைத் தவிர்க்க உதவும்.
