பூமிக்கு மிக அருகில் மற்றொரு பூமி! நாசா கண்டுபிடித்த ரகசிய உலகம்!

வான்வெளி ஆய்வில் ஒரு புதிய மைல்கல்லாக, சூரிய குடும்பத்திற்கு மிக அருகிலேயே பூமி போன்ற மற்றொரு கிரகத்தை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

பிரம்மாண்டமான விண்வெளிப் பரப்பில், பூமியில் இருந்து வெறும் 25 ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ள இந்த புதிய கிரகத்திற்கு ‘ஜி.ஜே 3378பி’ (GJ 3378b) என்று பெயரிடப்பட்டுள்ளது.

உயிரினங்கள் வாழ்வதற்கு ஏற்ற ‘கோல்டிலாக்ஸ் மண்டலம்’ எனப்படும் தட்பவெப்ப சூழலில் இந்த கிரகம் அமைந்துள்ளதாக நாசா உறுதி செய்துள்ளது.

இந்தப் புதிய உலகம், பூமியைப் போலவே பாறைகளால் ஆனது என்றும், அதன் மேற்பரப்பில் தண்ணீர் திரவ நிலையில் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் இருப்பதாகவும் விஞ்ஞானிகள் நம்பிக்கையுடன் தெரிவிக்கின்றனர்.

இந்த கிரகத்தின் சிறப்பம்சங்களை உற்று நோக்கினால், இது பூமியை விட இரண்டு மடங்கு அதிக எடையைக் கொண்டிருப்பதை அறிய முடிகிறது. இதன் காரணமாகவே இதனை ஒரு ‘சூப்பர் எர்த்’ என்று வானியலாளர்கள் அழைக்கின்றனர்.

சூரியனிடமிருந்து பூமிக்குக் கிடைக்கும் ஒளியில் சுமார் 90 சதவீதத்தை இந்த கிரகம் தனது தாய் நட்சத்திரத்திடம் இருந்து பெறுகிறது. இது ஒரு ‘சிவப்பு குள்ள நட்சத்திரத்தைச்’ (Red Dwarf) சுற்றி வருவதால், அங்கு நிலவும் வெப்பநிலை உயிரினங்கள் உருவாவதற்கு உகந்ததாக இருக்கக்கூடும் என்று கருதப்படுகிறது.

டெக்சாஸ் மற்றும் அரிசோனாவில் உள்ள நவீன தொலைநோக்கிகள் மூலம், நட்சத்திரங்களின் லேசான நகர்வை வைத்து இந்த கிரகம் கண்டறியப்பட்டுள்ளது.

“உயிரினங்களைத் தேடும் பயணத்தில் தண்ணீரைப் பின்தொடர்வோம்” என்ற தாரக மந்திரத்தின் அடிப்படையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இருப்பினும், செவ்வாய் கிரகத்தைப் போலவே இந்த கிரகத்தின் வளிமண்டலமும் அதன் நட்சத்திரத்தின் கதிர்வீச்சுகளால் சிதைக்கப்பட்டுள்ளதா அல்லது உயிரினங்களைக் காக்கும் கேடயமாக இருக்கிறதா என்பதுதான் தற்போதைய பெரிய கேள்வியாக உள்ளது. இதனை உறுதி செய்ய, நாசா வரும் 2040-களில் ஒரு அதிநவீன விண்வெளி ஆய்வகத்தை ஏவத் திட்டமிட்டுள்ளது.

அதன் மூலம் இந்த கிரகத்தின் வளிமண்டலத்தைத் துல்லியமாக ஆய்வு செய்து, அங்கு ஆக்சிஜன் போன்ற வாயுக்கள் இருக்கின்றனவா என்பதைக் கண்டறிய முடியும்.

இந்த ஆய்வை முன்னின்று நடத்திய கலிபோர்னியா பல்கலைக்கழகப் பேராசிரியர் பால் ராபர்ட்சன், 25 ஒளி ஆண்டுகள் என்பது விண்வெளியின் கணக்கில் நமது அடுத்த வீட்டு ஜன்னலைப் போன்றது என்று வர்ணித்துள்ளார்.

நமது பால்வெளி மண்டலம் ஒரு லட்சம் ஒளி ஆண்டுகள் அகலம் கொண்டது என்பதைக் கருத்தில் கொண்டால், இவ்வளவு அருகில் பூமி போன்ற ஒரு கிரகம் இருப்பது விண்வெளி ஆர்வலர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த கண்டுபிடிப்பு, இந்தப் பிரம்மாண்டமான பிரபஞ்சத்தில் மனிதர்கள் நாம் தனித்து வாழவில்லை, எங்கோ ஓரிடத்தில் மற்றொரு உலகம் நமக்காகக் காத்திருக்கிறது என்ற நம்பிக்கையை மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தியுள்ளது.

Related News

Latest News