தமிழகத்தில் கிராமப்புறங்களில் குடிசை வீடுகளில் வசிக்கும் ஏழை மக்களுக்கு கான்கிரீட் வீடு கட்டுவதற்காக வெற்றி வீடு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் ஒரு வீட்டிற்கு ரூ.5 லட்சம் வரை நிதியுதவி வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் ஆண்டில் சுமார் 70,000 வீடுகள் கட்ட ரூ.3,500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இத்திட்டத்தில் பயன்பெற, விண்ணப்பதாரர் பெயரில் சொந்த நிலம் அல்லது சட்டப்பூர்வ பட்டா இருக்க வேண்டும். ஓலை, வைக்கோல் அல்லது களிமண் சுவர்களுடன் கூடிய குடிசை வீட்டில் வசிக்கும் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய கிராமப்புற குடும்பங்கள் தகுதியுடையவர்கள். அரசு புறம்போக்கு நிலத்தில் குடிசை அமைத்து வசிப்பவர்கள் இத்திட்டத்தின் கீழ் பயனடைய முடியாது.
விண்ணப்பிக்க ஆதார் அட்டை, குடும்ப அட்டை, பட்டா மற்றும் சிட்டா நகல், வருமானச் சான்றிதழ், வாக்காளர் அடையாள அட்டை, புகைப்படம், வங்கி கணக்கு விவரங்கள் மற்றும் சொந்த வீடு இல்லை என்பதற்கான சுய உறுதிமொழிப் பத்திரம் போன்ற ஆவணங்கள் தேவைப்படலாம்.
தகுதியானவர்கள் தங்கள் உள்ளூர் கிராம ஊராட்சி மன்ற அலுவலகத்தை நேரில் அணுகி விண்ணப்பிக்கலாம். ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்ளிட்ட குழுவினர் தகுதியை ஆய்வு செய்து பயனாளிகளைத் தேர்வு செய்வார்கள்.
