பாகிஸ்தான் அரசியலில் எப்போதும் சர்ச்சைகளுக்குப் பெயர்போனவர் அந்நாட்டின் முன்னாள் உள்துறை அமைச்சர் ஷேக் ரஷீத் அகமது (Sheikh Rasheed Ahmed).
தற்போது அவர் வெளியிட்டுள்ள ஒரு வீடியோ, சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. லஷ்கர்-இ-தொய்பா (Lashkar-e-Taiba – LeT) போன்ற உலக நாடுகளால் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகளின் முக்கியத் தளபதிகளுடன் ஒரே மேடையில் அமர்ந்து, இந்தியாவுக்கு எதிராக அவர் விடுத்துள்ள மிரட்டல்கள் இப்போது சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகின்றன.
ஒரு நாட்டின் பொறுப்பான பதவியில் இருந்தவர், பகிரங்கமாகத் தீவிரவாதிகளுடன் கைகோர்த்திருப்பது உலக நாடுகளை முகம் சுளிக்க வைத்துள்ளது.
இந்த நிகழ்வில் பேசிய ஷேக் ரஷீத், மும்பை தாக்குதலின் மூளையாகச் செயல்பட்ட பயங்கரவாத அமைப்பின் தலைவன் ஹஃபீஸ் சயீதை [Hafiz Saeed] வானளாவப் புகழ்ந்து தள்ளியுள்ளார்.
“நான் ஹஃபீஸ் சயீதின் அடிமை” என்று அவர் மேடையில் பகிரங்கமாக அறிவித்தது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதுமட்டுமின்றி, தான் அமெரிக்காவில் இருந்தபோது தனது செல்போனில் ஹஃபீஸ் சயீதின் எண் வந்த காரணத்திற்காகவே தான் அங்கிருந்து வெளியேற்றப்பட்டதாகவும் அவர் பெருமையுடன் கூறியுள்ளார்.
ஒரு நாட்டின் முன்னாள் உள்துறை அமைச்சராக இருந்தவர், சர்வதேச பயங்கரவாதியுடன் இவ்வளவு நெருக்கம் காட்டுவது பாகிஸ்தான் அரசுக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையிலான தொடர்பை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
இந்தியாவுக்கு எதிரான அவரது பேச்சுக்கள் எல்லை மீறிய விஷமத்தனமாகவே பார்க்கப்படுகின்றன.
“பாகிஸ்தானை நோக்கி இந்தியா ஒருமுறை பார்த்தால் கூட, இந்தியா முழுமையாக அழிக்கப்படும்” என்றும், “இந்தியாவில் இனி பறவைகள் கூட ஒலிக்காது, கோவில்களில் மணிகள் ஒலிக்காது” என்றும் மதவெறியைத் தூண்டும் வகையில் அவர் ஆவேசமாகப் பேசியுள்ளார்.
இம்ரான் கான் [Imran Khan] தலைமையிலான ஆட்சியில் 2020 முதல் 2022 வரை உள்துறை அமைச்சராகப் பணியாற்றிய ஒருவர், இப்படி ஒரு தீவிரவாத அமைப்புக்கு ஆதரவாகவும், அண்டை நாட்டுக்கு எதிராகவும் நஞ்சைக் கக்குவது சர்வதேச அரங்கில் பாகிஸ்தானுக்குப் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தான் மார்க்கசி முஸ்லிம் லீக் [Pakistan Markazi Muslim League – PMML] என்ற அமைப்பின் போர்வையில் இயங்கும் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகளான காலித் மசூத் சந்து [Khalid Masood Sandhu] மற்றும் காரி முஹம்மது யாகூப் ஷேக் [Qari Muhammad Yaqoob Sheikh] ஆகியோருடன் ஷேக் ரஷீத் மேடையில் இருந்த வீடியோ ஆதாரங்கள் இப்போது வைரலாகி வருகின்றன.
பயங்கரவாதத்திற்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாக உலக நாடுகளிடம் நாடகமாடும் பாகிஸ்தான், நிஜத்தில் அந்த அமைப்புகளுடன் எப்படி இணைந்து செயல்படுகிறது என்பதற்கு இந்த நிகழ்வே ஒரு சாட்சி.
இந்த விவகாரம் இந்திய வெளியுறவுத் துறை மற்றும் சர்வதேச உளவு அமைப்புகளின் கவனத்திற்குச் சென்றுள்ளதால், பாகிஸ்தான் மீண்டும் ஒருமுறை உலக அரங்கில் தலைகுனியும் சூழல் உருவாகியுள்ளது.
