அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரானுக்கு எதிராக மீண்டும் ஒருமுறை தனது ஆக்ரோஷமான நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார். அண்மையில் ஒரு தனியார் ஊடகத்திற்கு அளித்த தொலைபேசி நேர்காணலில் பேசிய அவர், ஈரான் நாட்டை “மிகவும் தந்திரமான பேச்சாளர்கள்” என்று கடுமையாகச் சாடியுள்ளார்.
ஈரானுடனான இந்த நீண்டகால மோதலில் தன்னிடம் இப்போது இரண்டு முக்கிய வழிகள் இருப்பதாகவும், ஒன்று ஈரானின் பொருளாதாரத்தை முற்றிலுமாகச் சிதையவிடுவது, மற்றொன்று அந்த நாட்டின் மீது முன்னெப்போதும் இல்லாத வகையில் மிகக்கடுமையான ராணுவத் தாக்குதலை நடத்துவது என்று அவர் அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.
ஈரானின் தற்போதைய பொருளாதார நிலை மிகவும் பரிதாபகரமாக இருப்பதாகவும், சர்வதேசச் சந்தையில் அவர்களால் யாரிடமும் கடன் வாங்க முடியாத சூழல் நிலவுவதாகவும் டிரம்ப் எள்ளி நகையாடியுள்ளார்.
அமெரிக்காவால் முடக்கப்பட்டுள்ள ஈரானின் கோடிக்கணக்கான மதிப்பிலான சொத்துக்களைக் குறிப்பிட்ட அவர், “நான் தான் அவர்களின் வங்கியாளர், அவர்களின் ஒட்டுமொத்தப் பணமும் எங்கள் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது” என்று கூறியுள்ளார்.
பொருளாதார ரீதியாக ஈரானை ஒரு இக்கட்டான நிலைக்குத் தள்ளி, அதன் மூலம் அவர்களைப் பணிய வைப்பதே டிரம்பின் தற்போதைய ராஜதந்திரமாகப் பார்க்கப்படுகிறது.
அதே நேரத்தில், அமெரிக்க ராணுவத்தின் ஏவுகணைக் கையிருப்பு குறைந்து வருவதாக எழுந்துள்ள கவலைகளுக்கு டிரம்ப் ஒரு விளக்கத்தை அளித்துள்ளார்.
இதற்கு முன்னாள் அதிபர் ஜோ பைடன் தான் முழு முதற்காரணம் என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார். சுமார் 300 பில்லியன் டாலர் மதிப்பிலான ஆயுதங்களை உக்ரைனுக்கு பைடன் வாரி வழங்கியதே அமெரிக்காவின் ஆயுதக் கிடங்கு காலியாகக் காரணம் என்று கூறிய அவர், இப்போது மிக அதிவேகமாகப் புதிய ஏவுகணைகள் தயாரிக்கப்பட்டு வருவதாகவும், அமெரிக்காவின் பாதுகாப்புத் திறன் குறித்து யாரும் அச்சப்படத் தேவையில்லை என்றும் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
ஒருபுறம் டிரம்பின் மிரட்டல்கள் நீடித்தாலும், மறுபுறம் பாகிஸ்தான் மற்றும் கத்தார் போன்ற நாடுகள் ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே ஒரு சுமுகமான உடன்பாட்டை ஏற்படுத்தத் தீவிரமாக முயன்று வருகின்றன.
குறிப்பாக ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பது குறித்த பேச்சுவார்த்தைகள் இறுதி நிலையை எட்டியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இருப்பினும், வளைகுடா கடற்பகுதியில் தொடர்ந்து அரங்கேறி வரும் தாக்குதல் சம்பவங்கள் இந்த அமைதி முயற்சியைத் தடுத்து வருகின்றன.
டிரம்பின் இந்த ஆக்ரோஷமான பேச்சு வளைகுடா பிராந்தியத்தில் போர் பதற்றத்தை மீண்டும் அதிகரித்துள்ள நிலையில், சர்வதேச அரசியல் களம் இப்போது மிகவும் பரபரப்பாக மாறியுள்ளது.
