வார விடுமுறை நாட்களை முன்னிட்டு, பயணிகளின் வசதிக்காக சென்னையில் உள்ள முக்கிய பேருந்து முனையங்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து சிறப்புப் பேருந்துகளை இயக்க தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக்கழகம் திட்டமிட்டுள்ளது.
அதன்படி, கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட நகரங்களுக்கு நாளை (வெள்ளிக்கிழமை) 505 சிறப்புப் பேருந்துகளும், 15-ந் தேதி (சனிக்கிழமை) 570 சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன.
கோயம்பேடு பேருந்து முனையத்தில் இருந்து திருவண்ணாமலை, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, ஓசூர் மற்றும் பெங்களூரு உள்ளிட்ட இடங்களுக்கு 14 மற்றும் 15-ந் தேதிகளில் தலா 110 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
மாதவரம் பேருந்து முனையத்தில் இருந்து கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, போளூர் மற்றும் புதுச்சேரிக்கு இரு நாட்களிலும் தினமும் 80 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்.
மேலும், பெங்களூரு, திருப்பூர், ஈரோடு, கோயம்புத்தூர் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு 200 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
வார விடுமுறை முடிந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்பும் பயணிகளின் வசதிக்காக, 16-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை தேவைக்கேற்ப பல்வேறு இடங்களில் இருந்து 465 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என அரசு விரைவுப் போக்குவரத்துக்கழகம் தெரிவித்துள்ளது. பயணிகள் கூட்டத்தைப் பொறுத்து கூடுதல் பேருந்துகளும் இயக்கப்பட வாய்ப்புள்ளது.
