ஐரோப்பியக் கண்டத்தில், குறிப்பாக ரஷ்யாவின் அண்டை நாடுகளான பால்டிக் தேசங்களில் ஒரு மிகப்பெரிய போர் அச்சம் உருவாகியுள்ளது. ரஷ்யா தனது அண்டை நாடுகளான லிதுவேனியா, லாட்வியா, எஸ்டோனியா மற்றும் போலந்து மீது “ஃபால்ஸ் பிளாக்” (False Flag) எனப்படும் ஒரு சதித்திட்டத் தாக்குதலை நடத்தத் திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறைத் தகவல்கள் எச்சரிக்கின்றன.
அதாவது, உக்ரைன் தயாரித்த ட்ரோன்களைப் பயன்படுத்தித் தனது அண்டை நாடுகளின் முக்கிய அணைகள், மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் எரிவாயு குழாய்கள் மீது ரஷ்யாவே தாக்குதல் நடத்திவிட்டு, அதனை உக்ரைன் செய்ததாகப் பழிபோடத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்தச் சதித்திட்டத்தின் முக்கிய நோக்கம், நேட்டோ (NATO) அமைப்பின் ஒற்றுமையையும், அமெரிக்காவின் ஈடுபாட்டையும் சோதித்துப் பார்ப்பதுதான். ஒருவேளை பால்டிக் நாடுகள் மீது தாக்குதல் நடந்தால், நேட்டோ நாடுகள் உடனடியாக ரஷ்யாவிற்கு எதிராகப் போரில் இறங்குமா அல்லது தங்களுக்குள் விவாதித்துக் கொண்டு காலத்தைக் கடத்துமா என்பதை அறிய ரஷ்யா துடிக்கிறது.
நேட்டோ நாடுகளிடையே அரசியல் குழப்பத்தை உருவாக்குவதே புதினின் இந்த மாஸ்டர் பிளான் என்று உளவுத்துறை அதிகாரிகள் கருதுகின்றனர். லிதுவேனியா ஏற்கனவே தனது முக்கிய எரிவாயு நிலையங்கள் மற்றும் மின் உற்பத்தி நிலையங்களைப் பாதுகாக்க ராணுவத்தை மற்றும் கலகத் தடுப்புப் போலீசாரை இறக்கியுள்ளது.
லாட்வியா தனது டகாவா (Daugava) ஆற்று அணை மற்றும் நிலத்தடி எரிவாயு சேமிப்பு நிலையங்களில் பாதுகாப்பைத் தீவிரப்படுத்தியுள்ளது. போலந்து நாட்டில், நார்வேயிலிருந்து வரும் கடல்சார் எரிவாயு குழாய்கள் மற்றும் தனது முதல் அணுமின் நிலையம் ஆகியவற்றின் மீது நடத்தப்படக் கூடிய நாசவேலைகளைத் தடுக்க “அதிதீவிரக் கண்காணிப்பு” (Increased Vigilance) நிலையை அறிவித்துள்ளது.
போலந்து மின் பகிர்மான நிறுவனம் மற்றும் ராணுவம் இணைந்து உக்ரைன் எல்லையில் உள்ள மின் இணைப்புகளைப் பாதுகாக்கத் தொடங்கியுள்ளன. இதுமட்டுமன்றி, ஜெர்மனியின் லீப்ஜிக் (Leipzig) விமான நிலையத்தில் வெடிபொருட்களுடன் கூடிய ஒரு மர்ம ட்ரோன் பிடிபட்டது ஐரோப்பா முழுவதையும் அதிர வைத்துள்ளது.
