‘ஜனநாயகன்’ ரிலீஸ்: திரையரங்குகளுக்கு அரசின் முக்கிய உத்தரவு…

முதலமைச்சரும் தவெக தலைவருமான விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் நீண்டகால எதிர்பார்ப்புக்குப் பிறகு வரும் 23-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. தேர்தலுக்கு முன்பே வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தாலும், சில காரணங்களால் படம் தாமதமானது. பின்னர் தேர்தலில் வெற்றி பெற்று விஜய் முதலமைச்சரான நிலையில், தற்போது படத்தின் வெளியீட்டுக்கான அனைத்து பிரச்சினைகளும் முடிவுக்கு வந்துள்ளன.

இந்நிலையில், படத்தின் டிக்கெட் விற்பனையே தற்போது முக்கிய விவாதமாக மாறியுள்ளது. வழக்கமாக விஜய் படங்களின் முதல் நாள் டிக்கெட்டுகள் அதிக விலைக்கு விற்கப்படுவது வழக்கம். ஆனால் தற்போது விஜய் முதலமைச்சராக இருப்பதால், அரசு நிர்ணயித்துள்ள அதிகபட்ச கட்டணமான ரூ.190-ஐ மீறி டிக்கெட் விற்பனை நடந்தால் அது கடும் விமர்சனத்தை ஏற்படுத்தும் என்பதால், அரசு தீவிர கண்காணிப்பு மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்குகளுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. முந்தைய சில திரைப்படங்களின் வெளியீட்டில் டிக்கெட்டுகள் ஆயிரக்கணக்கான ரூபாய்க்கு கள்ளச்சந்தையில் விற்கப்பட்டதாக எழுந்த புகார்களைத் தொடர்ந்து, இந்த முறை அதிகாரிகள் சிறப்பு கண்காணிப்பில் ஈடுபட உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ரசிகர்கள் அதிகாரப்பூர்வ முன்பதிவு தளங்கள் மூலம் மட்டுமே டிக்கெட்டுகளை வாங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

‘ஜனநாயகன்’ திரைப்படம் உலகம் முழுவதும் 30 நாடுகளில் 8,000-க்கும் மேற்பட்ட திரைகளில் வெளியாகிறது. இந்தியா, பிரிட்டன், கனடா உள்ளிட்ட பல நாடுகளில் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. உலகளவில் முன்பதிவு வசூல் ஏற்கனவே ரூ.4 கோடியைத் தாண்டியுள்ளதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் 19-ஆம் தேதி முதல் முன்பதிவு தொடங்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. பெங்களூருவில் அதிகாலை 6 மணி காட்சிக்கான பெரும்பாலான டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துள்ள நிலையில், தமிழகத்தில் முதல் காட்சிகள் காலை 9 மணி முதல் திரையிடப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

Related News

Latest News