‘பதவி பறிக்கப்படும்!’ – அமைச்சர்களை அதிரவைத்த முதல்வர் விஜய்!

தமிழக அரசியலில் இன்று ஒரு மிகப்பெரிய பரபரப்பான திருப்பம் அரங்கேறியுள்ளது. தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், முதலமைச்சர் விஜய் தனது அமைச்சர்களுக்கு மிகக் கடுமையான மற்றும் நேரடியான ஒரு எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

ஆட்சிப் பொறுப்பேற்று வெறும் இரண்டு மாதங்களே ஆன நிலையில், சில அமைச்சர்களின் செயல்பாடுகள் மற்றும் அவர்கள் மீது எழுந்துள்ள புகார்கள் முதல்வரை மிகுந்த அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளதாகத் தெரிகிறது.

“தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் எனக்கு எவ்வளவு நெருக்கமானவர்களாக இருந்தாலும் சரி, தெரிந்தவர்கள் தெரியாதவர்கள் என்று எவ்விதப் பாகுபாடும் காட்ட மாட்டேன்; உடனடியாக அமைச்சர் பதவி பறிக்கப்படும்” என்று விஜய் முகத்திற்கு நேராகவே எச்சரித்துள்ளார்.

இந்த எச்சரிக்கையில் மிக முக்கியமான ஒரு அம்சம், அமைச்சர்கள் பள்ளிகளுக்குச் சென்று ரீல்ஸ் வீடியோக்கள் எடுப்பதற்குக் விதிக்கப்பட்டுள்ள தடை.

சமீபகாலமாக அமைச்சர்கள் ஆய்வு என்ற பெயரில் பள்ளி மாணவர்களிடம் நடந்துகொள்ளும் விதம் சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, அமைச்சர் கீர்த்தனா அரசுப் பள்ளி மாணவிகளிடம் ஆங்கிலத்தில் கேள்வி எழுப்பி, அவர்களைச் சங்கடப்படுத்திய விதம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதனைச் சுட்டிக்காட்டிய முதல்வர், ஆய்வு என்பது ஆக்கபூர்வமாக இருக்க வேண்டுமே தவிர, மாணவர்களுக்கு இடையூறு செய்யும் விதமாகவோ அல்லது சுய விளம்பரத்திற்காக ரீல்ஸ் எடுக்கும் இடமாகவோ பள்ளிகள் இருக்கக் கூடாது என்று கண்டிப்புடன் தெரிவித்துள்ளார்.

மேலும், ஊழல் விவகாரத்திலும் முதலமைச்சர் தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தியுள்ளார். பழனி கோவில் நில விவகாரத்தில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் மீது எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் புகார்கள் மற்றும் நிர்வாகத் ரீதியான சில தொய்வுகள் முதல்வரின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளன.

தவெக அரசு என்பது ஊழலற்ற, வெளிப்படையான நிர்வாகத்தைக் கொண்ட அரசாக இருக்க வேண்டும் என்பதில் தான் உறுதியாக இருப்பதாகவும், எவரேனும் ஒருவர் செய்யும் தவறால் ஒட்டுமொத்த அரசாங்கத்தின் நற்பெயரும் கெட்டுப் போவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்றும் அவர் ஆவேசமாகப் பேசியுள்ளார்.

தமிழகத்தின் தற்போதைய சட்டம் ஒழுங்கு நிலை மற்றும் நிர்வாகச் சிக்கல்கள் குறித்து எதிர்க்கட்சிகள் சரமாரியாகக் குற்றம் சாட்டி வரும் வேளையில், முதல்வரின் இந்த அதிரடி நடவடிக்கை அமைச்சர்கள் மத்தியில் ஒருவித நடுக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

“தவறாக எடுத்துக் கொள்ளாதீர்கள், மக்கள் நலனே முக்கியம்” என்று கூறியுள்ள விஜய், அமைச்சர்கள் தங்களது துறைகளில் முழு கவனத்தைச் செலுத்த வேண்டும் என்றும், தேவையற்ற சர்ச்சைகளில் சிக்கக் கூடாது என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

முதல்வரின் இந்தச் சவுக்கடி போன்ற பேச்சு, வரும் நாட்களில் தமிழக அமைச்சரவையில் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும், அரசு இயந்திரம் இன்னும் வேகமாக இயங்கும் என்றும் அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

Related News

Latest News