“ஊழலற்ற தமிழகத்தை உருவாக்குவோம்” என்ற இலக்கோடு, முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக அரசு இப்போது ஒரு மிகப்பெரிய அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளது. அரசு அலுவலகங்களில் சான்றிதழ்கள் வாங்கவோ அல்லது பட்டா மாறுதல் போன்ற பணிகளுக்கோ அதிகாரிகள் லஞ்சம் கேட்டால், இனி மக்கள் அமைதியாக இருக்கத் தேவையில்லை.
இதற்கென பிரத்யேகமாக ஒரு வாட்ஸ்அப் எண்ணைத் தமிழக அரசு தற்போது அறிமுகம் செய்துள்ளது. “பொதுமக்கள் பணத்தில் ஒரு ரூபாயைக் கூடத் தொட மாட்டேன், யாரையும் தொடவும் விடமாட்டேன்” என்று சட்டசபையில் முதல்வர் விஜய் கொடுத்த அதே வாக்குறுதியை, இப்போது களத்தில் செயல்படுத்தத் தொடங்கியுள்ளது அரசு இயந்திரம்.
அரசு ஊழியர்கள் யாராவது உங்களிடம் லஞ்சம் கேட்டால், உடனடியாக 94981 80936 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்குப் புகாரளிக்கலாம். இந்தப் புகாரை அளிக்கும் நபர்களின் விவரங்கள் முற்றிலும் ரகசியமாக வைக்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டுள்ளது. கரூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய முதல்வர் விஜய், “யாராவது லஞ்சம் கேட்டால் கொடுக்காதீர்கள்” என்று மக்களிடம் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
அதன் தொடர்ச்சியாகவே, இப்போது அதிகாரப்பூர்வமான இந்தப் புகார் எண் வெளியிடப்பட்டுள்ளது. இது அரசு அலுவலகங்களில் லஞ்சத்தை ஒரு வாடிக்கையாக வைத்திருக்கும் அதிகாரிகளுக்கு விடுக்கப்பட்ட ஒரு மிகப்பெரிய எச்சரிக்கையாகவே பார்க்கப்படுகிறது.
இது மட்டுமல்லாமல், அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் “லஞ்சம் வாங்குவதும் கொடுப்பதும் குற்றம்” என்ற விழிப்புணர்வு வாசகப் பலகைகளை வைக்க வேண்டும் எனத் தலைமைச் செயலாளர் சாய்குமார் உத்தரவிட்டுள்ளார்.
இந்தப் பலகைகளில் லஞ்ச ஒழிப்புத்துறையின் வாட்ஸ்அப் எண் மற்றும் இணையதள முகவரி கட்டாயம் இடம்பெற வேண்டும். முந்தைய காலங்களில் இதுபோன்ற உத்தரவுகள் முறையாகப் பின்பற்றப்படாத நிலையில், தற்போது ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு, லஞ்ச ஒழிப்பு நடவடிக்கைகளை மிகவும் கண்டிப்பாகவும் தீவிரமாகவும் பின்பற்றுமாறு அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வாட்ஸ்அப் தவிர, இன்னும் பல வழிகளில் மக்கள் தங்களது புகார்களைப் பதிவு செய்ய முடியும். [email protected] என்ற மின்னஞ்சல் முகவரி மூலமாகவோ அல்லது 044-22321090 மற்றும் 22321085 ஆகிய தொலைபேசி எண்கள் மூலமாகவோ நீங்கள் புகாரளிக்கலாம்.
நேரடியாகச் சென்று புகார் அளிக்க விரும்புபவர்கள் அல்லது தபால் மூலம் அனுப்ப விரும்புபவர்கள், சென்னை ஆலந்தூரில் உள்ள எம்கேஎன் (MKN) சாலையில் அமைந்துள்ள லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்புத் துறை அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளலாம். ஊழலை ஒழிக்க அரசு எடுக்கும் இந்த முயற்சிக்கு மக்கள் தரும் ஒத்துழைப்பு மிகவும் அவசியமாகும். உங்கள் உரிமையை நிலைநாட்டத் தயங்காமல் இந்தப் புகார் எண்களைப் பயன்படுத்துங்கள்.
