‘ஏவுகணை’ தயாரிப்பில் சம்பவம் செய்த இந்தியா! பாகிஸ்தான், சீனாவை நடுங்க விடும் மாற்றம்!

இந்திய பாதுகாப்புத் துறையில் இன்று ஒரு மிகப்பெரிய வரலாற்றுத் திருப்பம் நிகழ்ந்திருக்கிறது. இதுவரை மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்கள் மட்டுமே தயாரித்து வந்த அதிநவீன ஏவுகணைகளை, இனி இந்தியாவின் முன்னணி தனியார் நிறுவனங்களும் தயாரிக்கலாம் என்ற அதிரடி முடிவை மத்திய அரசு எடுத்துள்ளது.

இந்த புதிய கொள்கையின் கீழ் முதன்முதலில் தயாரிக்கப்பட உள்ள ஏவுகணைதான், இந்தியாவின் பெருமையான ‘அஸ்த்ரா மார்க்-2’. பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமான டி.ஆர்.டி.ஓ (DRDO) வடிவமைத்துள்ள இந்த ஏவுகணை, இந்திய வான்வெளியின் பலத்தை உலகத் தரத்திற்கு உயர்த்தப் போகிறது.

சுமார் 180 கிலோமீட்டருக்கும் அதிகமான தொலைவில் பறந்து கொண்டிருக்கும் எதிரி நாட்டு போர் விமானங்களை, அவை நம் கண்ணுக்குத் தெரிவதற்கு முன்பே துல்லியமாகத் தாக்கி அழிக்கும் திறன் கொண்டது இந்த ‘பியாண்ட் விஷுவல் ரேஞ்ச்’ (Beyond Visual Range )(BVR)ஏவுகணை.

இந்தியாவின் ஆகாய சிங்கம் என்று அழைக்கப்படும் சுகோய் Su-30MKI மற்றும் விரைவில் இந்திய விமானப்படையில் இணையவிருக்கும் தேஜஸ் மார்க்-2 போர் விமானங்களில் இந்த அஸ்த்ரா ஏவுகணைகள் பொருத்தப்பட உள்ளன. இதன் மூலம் வான்வழித் தாக்குதல்களில் இந்தியா ஒரு அசைக்க முடியாத சக்தியாக உருவெடுக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

இந்த மெகா திட்டத்திற்காக மத்திய பாதுகாப்பு அமைச்சகம் விரைவில் தனியார் நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்களை அதாவது பிட்களை (Bids) வரவேற்க உள்ளது. தகுதியுள்ள நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டு, அவற்றுக்கு இந்த ஏவுகணைகளைத் தயாரிப்பதற்கான உரிமம் வழங்கப்படும்.

இதன் மூலம் இந்தியாவின் ஆயுத உற்பத்தித் திறன் பன்மடங்கு அதிகரிப்பதோடு, உள்நாட்டிலேயே உலகத்தரம் வாய்ந்த தொழில்நுட்பங்கள் வளரவும் இது ஒரு அஸ்திவாரமாக அமையும். அரசு நிறுவனங்களோடு தனியார் நிறுவனங்களும் கைகோர்க்கும்போது, தேவையற்ற தாமதங்கள் தவிர்க்கப்பட்டு ராணுவத் தேவைகள் உடனுக்குடன் பூர்த்தி செய்யப்படும்.

இந்தியாவின் இந்த வளர்ச்சி உள்நாட்டுப் பாதுகாப்புடன் மட்டும் நின்றுவிடவில்லை. உலக நாடுகளும் இந்தியாவின் இந்த அஸ்த்ரா ஏவுகணையை வாங்க மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றன. குறிப்பாக இந்தோனேசியா போன்ற நாடுகள் ஏற்கனவே பிரம்மோஸ் ஏவுகணையோடு சேர்த்து, இந்த அஸ்த்ரா ஏவுகணையையும் வாங்குவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளன.

இதன் மூலம் இந்தியா ஒரு காலத்தில் ஆயுதங்களை இறக்குமதி செய்த நிலையை மாற்றி, இன்று உலக நாடுகளுக்கு அதிநவீன ஆயுதங்களை ஏற்றுமதி செய்யும் ஒரு வல்லரசாக விஸ்வரூபம் எடுத்து வருகிறது. ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் கீழ் எடுக்கப்பட்டுள்ள இந்த முயற்சி, இந்தியப் பொருளாதாரத்திலும், ராணுவ வலிமையிலும் ஒரு புதிய சகாப்தத்தைப் படைக்கும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

Related News

Latest News