‘சம வேலைக்கு சம ஊதியம்!’- முதல்வர் விஜய் எடுக்கும் அதிரடி முடிவு ?

தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் அறிக்கையில் தற்காலிக ஆசிரியர்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகளின்படி, தங்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்றும், ‘சம வேலைக்கு சம ஊதியம்’ வழங்க வேண்டும் என்றும் பகுதி நேர ஆசிரியர்கள் முதலமைச்சர் விஜய்க்கு அவசரக் கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் அறிக்கையில், “தமிழ்நாடு ஆசிரியர் பாதுகாப்புச் சட்டம் கொண்டு வரப்படும்” என்றும், “தற்காலிக ஆசிரியர்களில் 5 ஆண்டுகளை நிறைவு செய்தவர்கள் அனைவரும் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள்” என்றும் உறுதியளிக்கப்பட்டிருந்தது.

மேலும், தற்காலிகமாகப் பணியாற்றும் காலத்திலும் நிரந்தர ஆசிரியர்களுக்கு இணையாகச் ‘சம வேலைக்கு சம ஊதியம்’ வழங்கப்படும் என்றும் தவெக வாக்குறுதி அளித்திருந்தது. இந்த வாக்குறுதிகளைத் தற்போதைய தவெக ஆட்சியில் அரசாணையாக வெளியிட வேண்டும் என்று தமிழ்நாடு பகுதி நேர ஆசிரியர்கள் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் வலியுறுத்தியுள்ளார்.

தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் உடற்கல்வி, ஓவியம் மற்றும் தொழிற்கல்விப் பாடங்களுக்காகப் பகுதி நேர ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். கடந்த 16 ஆண்டுகளாகத் தற்காலிகப் பணியில் இருக்கும் 11,773 பகுதி நேர ஆசிரியர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று தொடர்ந்து போராடி வருகிறார்கள்.

தற்போது அதே பாடங்களை நடத்தும் சிறப்பாசிரியர்களுக்குக் காலமுறைச் சம்பளம் வழங்கப்படும் நிலையில், தங்களுக்கு மட்டும் வெறும் 15,000 ரூபாய் மட்டுமே தொகுப்பூதியமாக வழங்கப்படுவதாக ஆசிரியர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இந்த 11,773 தற்காலிகப் பணியிடங்களை நிரந்தரப் பணியிடங்களாக மாற்றி, அதற்கான நிதி ஒதுக்கீடு செய்வது அரசின் கொள்கை சார்ந்த முடிவாகும். எனவே, தவெக தலைவரும் முதலமைச்சருமான விஜய் இதில் நேரடியாகத் தலையிட்டு, அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான கொள்கை முடிவை எடுக்க வேண்டும் என்று ஆசிரியர்கள் கூட்டமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.

இதில் 50 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் பெண்களாகவும், பலர் ஓய்வுபெறும் வயதை நெருங்கிக் கொண்டிருப்பதாலும், வறுமையில் தவிக்கும் இவர்களின் வாழ்வாதாரத்தைக் காக்க முதல்வர் விஜய் உடனடியாகப் புதிய உத்தரவைப் பிறப்பிப்பார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Related News

Latest News