தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு கல்வியாண்டின் முழு ஆண்டு தேர்வுகள் முன்கூட்டியே நடத்தி முடிக்கப்பட்டு, மாணவர்களுக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டது.
வழக்கமாக ஜூன் 1ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கடும் கோடை வெப்பம் காரணமாக பள்ளிகள் திறப்பு தேதி தள்ளி வைக்கப்பட்டது.
மாணவர்களின் கற்றல் நாட்களை ஈடு செய்யும் வகையில், கல்வித்துறை கூடுதல் வேலை நாட்களை அறிவித்துள்ளது.
அதன்படி, ஜூலை 11, ஆகஸ்ட் 1, ஆகஸ்ட் 22, செப்டம்பர் 5, செப்டம்பர் 14, செப்டம்பர் 28 மற்றும் அக்டோபர் 10 ஆகிய நாட்களில் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் வழக்கமான வகுப்புகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவு புதுச்சேரி, காரைக்கால், மாகே மற்றும் ஏனாம் உள்ளிட்ட யூனியன் பிரதேசத்தின் அனைத்து பகுதிகளிலும் உள்ள பள்ளிகளுக்கும் பொருந்தும்.
அனைத்து பள்ளி நிர்வாகங்களும் இந்த அறிவிப்பை கட்டாயமாக பின்பற்றி, மாணவர்களின் கல்வி பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
கூடுதல் வேலை நாட்களில் விடுபட்ட பாடங்களை முடித்தல், முக்கிய பாடங்களுக்கான மீள்பார்வை வகுப்புகள் நடத்துதல், செய்முறைப் பயிற்சிகள் மற்றும் பல்வேறு கல்விசார் செயல்பாடுகளை மேற்கொள்ளுதல் ஆகியவற்றுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் மாணவர்கள் தேர்வுகளுக்கு சிறந்த முறையில் தயாராகும் வாய்ப்பு கிடைக்கும் என கல்வித்துறை நம்பிக்கை தெரிவித்துள்ளது.
