இனி 10 லட்சம் வரை இலவச சிகிச்சை! மத்திய அரசு சூப்பர் அறிவிப்பு!

ஏழை எளிய மக்களின் மருத்துவப் பாதுகாப்பிற்கு மத்திய அரசு வழங்கி வரும் ஆயுஷ்மான் பாரத் காப்பீட்டுத் திட்டத்தில், ஒரு மிகப்பெரிய வரலாற்றுச் சிறப்புமிக்க மாற்றம் வரப்போகிறது. ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்கள் தங்களது மருத்துவச் செலவுகளுக்காகப் பெரிதும் நம்பியிருக்கும் இந்தத் திட்டத்தில், காப்பீட்டுத் தொகையை இரண்டு மடங்காக உயர்த்த மத்திய நாடாளுமன்றக் குழுவின் மூலம் அதிரடிப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

தற்போது இந்த ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் ஒரு குடும்பத்திற்கு ஆண்டுக்கு ஐந்து லட்சம் ரூபாய் வரை இலவச மருத்துவக் காப்பீடு வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், இன்றைய காலகட்டத்தில் இந்தத் தொகை போதுமானதாக இல்லை என்று நாடாளுமன்றச் சுகாதாரக் குழு தனது புதிய அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது. எனவே, இந்த ஐந்து லட்சம் ரூபாய் காப்பீட்டு வரம்பை, அப்படியே இரட்டிப்பாக்கி பத்து லட்சம் ரூபாயாக உயர்த்த வேண்டும் என்று மத்திய அரசுக்குக் குழு பரிந்துரைத்துள்ளது.

இதற்கு மிக முக்கியமான காரணம், இன்றைய மருத்துவ உலகில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப வளர்ச்சியும், அதற்கான செலவுகளும்தான். குறிப்பாக கல்லீரல் மற்றும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகள், சிக்கலான இதய அறுவை சிகிச்சைகள் மற்றும் புற்றுநோய்க்கான இம்யூனோதெரபி போன்ற அதிநவீன உயிர்காக்கும் சிகிச்சைகளுக்கு தற்போதைய ஐந்து லட்சம் ரூபாய் வரம்பு மிகக் குறைவாக உள்ளது. இதனால் காப்பீடு இருந்தும், நோயாளிகள் தங்கள் கைகளில் இருந்து லட்சக்கணக்கில் செலவிட வேண்டிய அவல நிலை ஏற்படுகிறது. இதனைத் தடுத்து, ஏழைகளுக்கும் உலகத்தரம் வாய்ந்த உயர்தர சிகிச்சைகள் முழுமையாகக் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே இந்தத் தொகை உயர்த்தப்பட உள்ளது.

மேலும், இந்த காப்பீட்டுத் தொகையைப் பெறுவதற்கான ஒப்புதல் செயல்முறையை வெறும் ஆறு மணி நேரத்திற்குள் முடிக்க வேண்டும் என்றும், இதில் தேவையின்றித் தாமதம் செய்யும் தனியார் மருத்துவமனைகள் அல்லது ஏஜென்சிகளுக்குக் கடுமையான அபராதம் விதிக்க வேண்டும் என்றும் நாடாளுமன்றக் குழு வலியுறுத்தியுள்ளது. இதற்காக ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, ஒப்புதல் வழங்கும் பணியை வேகப்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுவரை நாடு முழுவதும் நாற்பத்து மூன்று கோடிக்கும் அதிகமான ஆயுஷ்மான் அட்டைகள் வழங்கப்பட்டு, கோடிக்கணக்கான மக்கள் பயனடைந்துள்ளனர். இந்தச் சூழலில், காப்பீட்டுத் தொகை பத்து லட்சமாக உயர்த்தப்பட்டால், அது நடுத்தர மற்றும் அடித்தட்டு மக்களின் மிகப்பெரிய மருத்துவப் பாரத்தைக் குறைக்கும் ஒரு மாபெரும் வரப்பிரசாதமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

Related News

Latest News