தமிழ்நாட்டில் கோடை வெயிலின் தாக்கம் படிப்படியாக குறைந்து வரும் நிலையில், தென்மேற்கு பருவமழையின் தாக்கத்தால் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.
கேரளாவில் பருவமழை தீவிரமடைந்துள்ளதால், தமிழகத்தின் எல்லையோர மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை மற்றும் குறைந்த வெப்பநிலை பதிவாகி வருகிறது.
இந்த நிலையில், தெற்கு குஜராத்தில் இருந்து மத்திய கேரளா வரை சராசரி கடல் மட்டத்தில் காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக இன்று (ஜூலை 9) நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பிற மாவட்டங்களில் சில இடங்களில் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழையும், தமிழகத்தின் பிற பகுதிகள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜூலை 12 வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றம் இருக்காது என்றும், சில இடங்களில் சற்று உயர வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
சென்னையில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 38 முதல் 39 டிகிரி செல்சியஸ் வரையிலும், குறைந்தபட்ச வெப்பநிலை 29 முதல் 30 டிகிரி செல்சியஸ் வரையிலும் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசும் வாய்ப்பு உள்ளதால், குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் அந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.
