உங்கள் வீட்டுப் பீரோவிலும், வங்கி லாக்கர்களிலும் சும்மா உறங்கிக் கொண்டிருக்கும் தங்க நகைகள், இனி உங்களுக்கு ஒரு நிலையான வருமானத்தைத் தரப்போகின்றன. இந்தியக் குடும்பங்களிடம் சுமார் 25,000 டன் தங்கம் பயன்படுத்தப்படாமல் முடங்கிக் கிடப்பதாக மதிப்பிடப்பட்டுள்ள நிலையில், அந்தத் தங்கத்தை நாட்டின் பொருளாதாரப் புழக்கத்திற்குக் கொண்டு வர மத்திய அரசு ஒரு மிகப்பெரிய திட்டத்தைத் தீட்டியுள்ளது.
கடந்த 2015-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட ‘தங்க பணமாக்கல் திட்டத்தை’ தற்போது முற்றிலுமாகப் புதுப்பித்து, சாமானிய மக்களும் எளிதில் பயன்படுத்தும் வகையில் மாற்றி அமைக்கப் பிரதமர் மோடி தலைமையிலான அரசு முடிவெடுத்துள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் இரண்டு வாரங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தத் திட்டத்தில் கொண்டு வரப்படவுள்ள மிக முக்கியமான மாற்றம் என்னவென்றால், இனி வங்கிகள் மட்டுமின்றி உங்களின் நம்பிக்கைக்குரிய நகைக் கடைகளும் பொதுமக்களிடமிருந்து தங்கத்தை டெபாசிட்டாகப் பெற அனுமதி அளிக்கப்பட உள்ளது. பழைய திட்டத்தில் மக்கள் வங்கிகளுக்குச் சென்று நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டியிருந்ததாலும், கடுமையான ஆவண நடைமுறைகளாலும் இதில் ஆர்வம் காட்டவில்லை.
ஆனால் இனி, மக்கள் தங்களுக்குப் பரிச்சயமான நகைக்கடைகளிலேயே தங்கத்தை ஒப்படைக்கலாம் என்பது இந்தத் திட்டத்தின் ஆகச்சிறந்த சிறப்பம்சமாகும். நீங்கள் ஒப்படைக்கும் தங்கத்தின் தூய்மையைப் பரிசோதித்து, அதற்கு இணையான வட்டித் தொகையை அரசு உங்களுக்கு வழங்கும். திட்டத்தின் காலம் முடிந்த பிறகு, உங்கள் விருப்பப்படி தங்கமாகவோ அல்லது அதற்கு இணையான பணமாகவோ நீங்கள் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம்.
இந்தியாவின் மொத்தத் தங்க இருப்பில் வெறும் 5 சதவீதத் தங்கத்தைச் சேகரித்தாலே, சுமார் 90 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான முதலீடு இந்தியப் பொருளாதாரத்திற்குள் நுழையும். இதன் மூலம் வெளிநாடுகளில் இருந்து தங்கம் இறக்குமதி செய்வது பெருமளவு குறையும் என்பதால், சர்வதேச சந்தையில் இந்திய ரூபாயின் மதிப்பு கணிசமாக உயரும்.
இதைக் கருத்தில் கொண்டுதான், நாட்டு மக்கள் அனைவரும் ஒரு வருடத்திற்குப் புதிய தங்கம் வாங்குவதைத் தள்ளிவைக்க வேண்டும் என்று பிரதமர் மோடி அண்மையில் உருக்கமான கோரிக்கை விடுத்திருந்தார். ஒரு நாட்டின் பொருளாதாரத்தையே மாற்றியமைக்கும் வல்லமை கொண்ட இந்தத் திட்டம், வெறும் முதலீடு மட்டுமல்லாமல் நாட்டின் நிதி சுதந்திரத்திற்கும் ஒரு மிகப்பெரிய ஊக்கமாக அமையும்.
இருப்பினும், இந்தியக் குடும்பங்களைப் பொறுத்தவரைத் தங்கம் என்பது வெறும் உலோகமல்ல, அது தலைமுறை தலைமுறையாகப் போற்றப்படும் ஒரு உணர்வுப்பூர்வமான சொத்து. இந்தத் திட்டத்தின் கீழ் நகைகளை உருக்க வேண்டிய நிலை ஏற்படும் என்பதால், அதனை மக்கள் எப்படி ஏற்றுக்கொள்வார்கள் என்பதுதான் இப்போதைய சவாலாக உள்ளது.
வட்டி வருமானம், வரிச் சலுகைகள் மற்றும் ஆவண நடைமுறைகள் குறித்த தெளிவான விதிமுறைகளை அரசு வெளியிடும்போது, இத்திட்டத்தின் மீதான ஆர்வம் மக்களிடையே இன்னும் அதிகரிக்கும். வீட்டில் சும்மா கிடக்கும் தங்கத்தை லாக்கரில் வைத்துப் பாதுகாப்புக்காக வாடகை கட்டுவதற்குப் பதிலாக, அதைத் தேசத்தின் வளர்ச்சிக்குப் பயன்படுத்தி நீங்களும் லாபம் பெற இது ஒரு பொன்னான வாய்ப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
