உலக வரைபடம் ஒரு பெரிய பொய்யா? இந்தியாவைச் சிறியதாகக் காட்டுவது ஏன்?

நாம் அன்றாடம் பயன்படுத்தும் உலக வரைபடங்கள் அனைத்தும் தவறானவை என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? சிந்தித்துப் பாருங்கள், இந்தியா உலகிலேயே ஏழாவது பெரிய நாடு. ஆனால், வரைபடத்தில் இந்தியாவை விட ஒன்றரை மடங்கு சிறிய நாடான கிரீன்லாந்து, இந்தியாவை விடப் பல மடங்கு பெரியதாகக் காட்சியளிக்கிறது.

இது இந்தியாவுக்கு மட்டுமல்ல, உலக வரைபடத்தில் இருக்கும் பெரும்பாலான நாடுகளின் அளவுகள் உண்மையில் இருப்பதை விட முற்றிலும் மாறுபட்டே காட்டப்படுகின்றன. நாடுகளின் அளவுகளில் ஏன் இவ்வளவு பெரிய குளறுபடிகள் இருக்கின்றன? இதனைச் சரி செய்ய அந்தந்த நாட்டு அரசாங்கங்கள் ஏன் முயற்சி செய்யவில்லை? இதன் பின்னணியில் இருக்கும் அறிவியல் மற்றும் அரசியல் காரணங்களை இப்போது விரிவாகப் பார்ப்போம்.

இதனைப் புரிந்துகொள்ள ஒரு சிறிய உதாரணத்தைப் பார்ப்போம். ஒரு உருண்டை வடிவக் கால்பந்தைக் கிழித்து, அதை ஒரு தட்டையான காகிதத்தைப் போல மாற்ற முயற்சி செய்தால், அதன் வடிவம் சிதைந்து போவதை நம்மால் பார்க்க முடியும். அதே போலத்தான், முப்பரிமாண (3D) வடிவம் கொண்ட நமது பூமியை, இரு பரிமாண (2D) தட்டையான வரைபடமாக மாற்றும்போது அதன் உண்மையான அளவுகள் மற்றும் வடிவத்தைச் சிதைக்காமல் கொண்டு வருவது என்பது இயலாத காரியம்.

இதற்காகத்தான் சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு ஜெரார்டஸ் மெர்கேட்டர் (Gerardus Mercator) என்பவர் ஒரு புதிய வரைபடத்தை உருவாக்கினார். அந்த வரைபடத்தைத்தான் நாம் இப்போதும் கூகுள் மேப் முதல் பள்ளிப் பாடப்புத்தகங்கள் வரை அனைத்திலும் பயன்படுத்துகிறோம்.

மெர்கேட்டர் வரைபடம் என்பது முக்கியமாக அந்தக் காலத்துக் கடல் பயணிகளுக்காக உருவாக்கப்பட்டது. இதில் ஒரு பெரிய தந்திரம் செய்யப்பட்டுள்ளது. துருவங்களுக்கு அருகில் இருக்கும் நாடுகளின் அளவுகள் மிகப் பெரியதாகவும், நிலநடுக்கோட்டுக்கு அருகில் இருக்கும் நாடுகளின் அளவுகள் மிகச் சிறியதாகவும் மாற்றப்பட்டுள்ளன.

இது மாலுமிகளுக்குத் திசைகளைக் கண்டறிய உதவியாக இருந்தாலும், நாடுகளின் உண்மையான பரப்பளவை இது மறைத்துவிட்டது. இதன் விளைவாக, ஐரோப்பா மற்றும் ரஷ்யா போன்ற நாடுகள் வரைபடத்தில் பிரம்மாண்டமாகத் தெரிவதும், ஆப்பிரிக்கா மற்றும் இந்தியா போன்ற நாடுகள் குட்டியாகத் தெரிவதும் ஒரு பொதுவான பார்வையாகிவிட்டது.

இதற்குப் பின்னால் ஒரு மறைமுகமான அரசியல் குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுகிறது. மேற்கத்திய நாடுகளின் ஆதிக்கத்தை நிலைநிறுத்துவதற்காகவே, அந்த நாடுகள் வரைபடத்தின் மையத்திலும், பெரிய அளவிலும் காட்டப்படுவதாகச் சில ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

ஒருவேளை நமது இந்தியா நிலநடுக்கோட்டில் இல்லாமல் வட துருவத்திற்கு அருகில் இருந்திருந்தால், வரைபடத்தில் அது இப்போது இருப்பதை விடப் பல மடங்கு பெரியதாகத் தெரிந்திருக்கும். நாடுகளின் உண்மையான அளவைத் தெரிந்துகொள்ள விரும்பினால் ‘thetruesize.com’ போன்ற இணையதளங்கள் இப்போது நமக்கு உதவுகின்றன. வரைபடம் என்பது ஒரு நாட்டின் எல்லையை மட்டும் குறிப்பதல்ல, அது அந்த நாட்டை உலகம் எப்படிப் பார்க்கிறது என்பதையும் தீர்மானிக்கிறது. எனவே வரைபடத்தின் பின்னால் இருக்கும் இந்த உண்மைகளை நாம் உணர்ந்து கொள்வது மிக அவசியமாகும்.

Related News

Latest News