“பொறுத்திருந்து பாருங்கள்”… சசிகலா குறித்து கருப்பணன் சஸ்பென்ஸ் பதில்..

ஈரோடு அ.தி.மு.க. மாநகர் மாவட்ட அலுவலகத்தில் அண்ணா தொழிற்சங்க பேரவையின் மாவட்ட செயலாளர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், முன்னாள் அமைச்சர்கள் ஏ.கே. செல்வராஜ், கே.சி. கருப்பணன் எம்.எல்.ஏ. உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் கே.சி. கருப்பணன், அ.தி.மு.க. வலுவாக செயல்பட்டு வருவதாகவும், சில பொறுப்பாளர்கள் தனிப்பட்ட ஆசைக்காக மட்டுமே த.வெ.க.வில் இணைந்துள்ளதாகவும் கூறினார். பெருந்துறை முன்னாள் எம்.எல்.ஏ. ஜெயக்குமாருடன் மிகக் குறைந்த எண்ணிக்கையிலானோர் மட்டுமே கட்சி மாறியதாகவும், அதனால் அ.தி.மு.க.க்கு எந்த பாதிப்பும் இல்லை என்றார்.

மேலும், இளைஞர்களின் வாக்குகளால் த.வெ.க. எதிர்பாராத வெற்றியை பெற்றதாகவும், தற்போது மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டினார். எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில் அனைவரும் ஒன்றிணைந்து அ.தி.மு.க.வை மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வர முயற்சிப்பதாகவும் தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முன்னாள் அமைச்சர்கள் சிலர் தங்கள் மீது உள்ள வழக்குகள் மற்றும் சொத்துகளை பாதுகாக்கும் நோக்கில்தான் த.வெ.க.வில் இணைவதாக விமர்சித்தார். அதே நேரத்தில், அ.தி.மு.க.வில் இணைய விரும்பும் அனைவரையும் வரவேற்போம் என்றும் கூறினார்.

டி.டி.வி. தினகரன் மற்றும் சசிகலா மீண்டும் அ.தி.மு.க.வில் இணைய வாய்ப்பு உள்ளதா என்ற கேள்விக்கு, “பொறுத்திருந்து பாருங்கள்” என்று பதிலளித்தார். மேலும், அ.தி.மு.க.வில் இருந்து த.வெ.க.வுக்கு சென்ற முன்னாள் அமைச்சர்களும் மீண்டும் தங்கள் கட்சிக்கு திரும்ப வாய்ப்புள்ளதாக தெரிவித்தார். சசிகலா மற்றும் டி.டி.வி. தினகரனை கட்சியில் சேர்க்க வேண்டும் என்ற நிர்வாகிகளின் கோரிக்கையுடன் கருப்பணனின் இந்தக் கருத்து அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related News

Latest News