ஈரானின் 80 இடங்களைத் தரைமட்டமாக்கிய அமெரிக்கா! டிரம்ப் வெளியிட்ட ‘Boom’ வீடியோ!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெளியிட்டுள்ள ஒரு சமூக வலைதளப் பதிவு, இப்போது ஒட்டுமொத்த உலக நாடுகளையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. ஈரான் மீது அமெரிக்க ராணுவம் நடத்திய மிகக் கடுமையான ஏவுகணைத் தாக்குதல்களுக்குப் பிறகு, தனது ‘ட்ரூத் சோஷியல்’ (Truth Social) தளத்தில் ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்துள்ள டிரம்ப், அதில் “Boom” என்று பதிவிட்டுள்ளார்.

“இதற்காகத்தான் நான் வாக்களித்தேன்” என்ற வாசகத்துடன், ஈரானில் குண்டுகள் வெடிக்கும் வீடியோவையும் அவர் பகிர்ந்துள்ளது, மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் போர் மீண்டும் தீவிரமடைவதைப் பகிரங்கமாக உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளது.

அமெரிக்காவின் இந்தத் திடீர் ஆக்ரோஷத்திற்கு மிக முக்கியமான காரணம், ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரான் நடத்திய அத்துமீறல்கள்தான். இந்தப் பாதையைக் கடந்த மூன்று வணிகக் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, அமெரிக்காவின் சென்ட்காம் (CENTCOM) படைகள் அதிரடியாகக் களத்தில் இறங்கின.

ஈரானின் வான் பாதுகாப்பு அமைப்புகள், கடலோர ரேடார் தளங்கள் மற்றும் ஈரானிய புரட்சிகரக் காவல் படைக்குச் சொந்தமான 60-க்கும் மேற்பட்ட சிறு போர்க்கப்பல்கள் என மொத்தம் 80-க்கும் மேற்பட்ட இலக்குகளை அமெரிக்கா துல்லியமாகத் தாக்கி அழித்துள்ளது. இந்தப் போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஈரான் அப்பட்டமாக மீறிவிட்டதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.

மறுபுறம், ஈரானின் நாடாளுமன்றச் சபாநாயகர் முகமது பாகர் காலிபாப் அமெரிக்காவிற்கு மிகக் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார். “மிரட்டிப் பணிய வைக்கும் காலம் முடிந்துவிட்டது; ஈரான் ஒருபோதும் யாருக்கும் தலைவணங்காது” என்று அவர் ஆவேசமாகப் பதிவிட்டுள்ளார்.

அமெரிக்கா மீண்டும் எண்ணெய் வர்த்தகத் தடைகளை விதித்திருப்பதும், தெற்கு ஈரான் மீது தாக்குதல் நடத்துவதும் செய்து கொண்ட ஒப்பந்தத்திற்கு எதிரானது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த மோதல் ஒருபுறம் இருக்க, அமெரிக்காவின் 5-வது கடற்படைத் தளம் அமைந்துள்ள பஹ்ரைன் நாட்டில், முன்னெச்சரிக்கையாக ஏவுகணை அபாயச் சங்குகள் ஒலிக்கச் செய்யப்பட்டுள்ளது பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.

ஈரானின் மறைந்த உச்ச தலைவர் ஆயத்துல்லா அலி காமேனியின் இறுதிச்சடங்கு நிகழ்வுகள் ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்கும் வேளையில், இந்தத் தாக்குதல்கள் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. காமேனியின் உடல் அடக்கம் செய்யப்பட்ட பிறகு இரு நாடுகளுக்கும் இடையே நிரந்தர அமைதிப் பேச்சுவார்த்தைகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போதைய சூழல் அந்த நம்பிக்கையைச் சிதைத்துள்ளது.

உலக நாடுகளின் எரிசக்தி விநியோகத்தையே முடக்கும் வல்லமை கொண்ட இந்த மோதல், அடுத்தகட்டமாக எங்கே சென்று முடியும் என்பதுதான் இப்போது உலக நாடுகளின் மிகப்பெரிய கவலையாக உள்ளது. ஒருபுறம் டிரம்பின் “Boom” முழக்கம், மறுபுறம் ஈரானின் பதிலடி மிரட்டல் என மத்திய கிழக்கு ஒரு வெடிமருந்து கிடங்காகவே மாறியுள்ளது.

Related News

Latest News