அதிமுக முடிஞ்சுது.. இப்போ திமுக? கோட்டைக்குள் புகுந்து விளையாடும் ‘தவெக’!

தமிழக அரசியல் களத்தில் தற்போது ஒரு மிகப்பெரிய அதிகார மாற்றம் நிழல் போல அரங்கேறிக் கொண்டிருக்கிறது. 60 ஆண்டுகால திமுக-அதிமுக அரசியலை வீழ்த்தி முதலமைச்சர் விஜய் தலைமையில் தவெக அரசு அமைந்த பிறகு, மாற்று அரசியலைத் தேடிப் பல முக்கிய புள்ளிகள் தவெக நோக்கிப் படையெடுத்து வருகின்றனர்.

ஏற்கனவே அதிமுகவிலிருந்து முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் வரிசையாகத் தவெக-வில் இணைந்து எடப்பாடி பழனிசாமிக்கு அதிர்ச்சி கொடுத்து வந்த நிலையில், தற்போது அந்தப் புயல் திமுகவின் கோட்டையையும் தாக்கத் தொடங்கியுள்ளது. இது எதிர்க்கட்சித் தலைவரான உதயநிதி ஸ்டாலின் மற்றும் திமுக தலைமைக்கு ஒரு மிகப்பெரிய கவலையை ஏற்படுத்தியுள்ளது.

திமுகவில் பல ஆண்டுகளாக உழைத்த மாவட்ட, நகர மற்றும் வட்ட அளவிலான நிர்வாகிகள் இப்போது தங்களது அரசியல் பயணத்தைத் தமிழக வெற்றிக் கழகம் நோக்கித் திருப்பியுள்ளனர். குறிப்பாக, சென்னையில் ஆயிரம் விளக்கு பகுதி துணைச் செயலாளர் ரவி மற்றும் மாவட்டப் பிரதிநிதி சாமுவேல் தலைமையில் சுமார் 300 பேர் தவெக-வில் இணைந்தது திமுக வட்டாரத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

இதுமட்டுமல்லாமல், திமுக இலக்கிய அணி நிர்வாகியும் முன்னாள் எம்.எல்.ஏ-வுமான கலைராஜன், திருவள்ளூர் மாவட்டத் துணைச் செயலாளர் குமரன் போன்ற மூத்த நிர்வாகிகளும் விஜய்யின் தலைமையை ஏற்றுத் தவெக-வில் இணைந்துள்ளனர். இதில் மிக முக்கியமான ஒரு விஷயம் என்னவென்றால், திமுகவின் சீனியர் தலைவர்களின் வாரிசுகளும் கூட இப்போது தவெக-வில் ஆர்வம் காட்டி வருவதுதான்.

முன்னாள் மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகனின் மகன் சந்தீப் ஏற்கனவே தவெக-வில் இணைந்துள்ள நிலையில், மேலும் பல முக்கிய வாரிசுகள் தவெக தலைமையுடன் ரகசியப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த திமுக முன்னாள் அமைச்சர் ஒருவரும் இன்னும் சில நாட்களில் தவெக-வில் இணைய வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் கசிகின்றன. இதனால் திமுகவின் வாக்கு வங்கி சிதறிவிடுமோ என்ற அச்சம் கட்சித் தலைமைக்கு எழுந்துள்ளது.

இந்தத் தொடர் கட்சித் தாவல்களைத் தடுக்க எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் இப்போது அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளார். அனைத்து மாவட்டச் செயலாளர்கள் மற்றும் இளைஞரணி நிர்வாகிகளுக்கு அவர் விடுத்துள்ள அறிவுறுத்தலில், “நிர்வாகிகளைத் தக்கவைக்க உடனே நடவடிக்கை எடுங்கள், அவர்களின் அதிருப்திகளைப் போக்கி மீண்டும் கட்சிப் பணிகளில் ஈடுபடுத்துங்கள்” என்று உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருகிறது.

ஆனாலும், முதலமைச்சர் விஜய்யின் மக்கள் செல்வாக்கும், அவர் செயல்படுத்தி வரும் அதிரடி நலத்திட்டங்களும் திமுக நிர்வாகிகளை வெகுவாகக் கவர்ந்து வருவதால், இந்தக் கட்சித் தாவல் படலத்தைக் கட்டுப்படுத்துவது உதயநிதிக்கு ஒரு மிகப்பெரிய சவாலாகவே இருக்கும் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

Related News

Latest News