அதிமுகவுக்கு மீண்டும் ஒரு பேரிடி!

தமிழக அரசியல் களம் தற்போது அடுத்தடுத்த அதிரடித் திருப்பங்களால் அனல் பறந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக, பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவில் இருந்து முக்கியத் தலைவர்கள் ஒவ்வொருவராக வெளியேறி வருவது அக்கட்சியின் தலைமைக்கு மிகப்பெரிய தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

அந்த வகையில், தற்போது கொங்கு மண்டலத்தைத் தொடர்ந்து, திருச்சி மாவட்ட அரசியலிலும் அதிமுகவிற்கு ஒரு பேரிடி விழுந்துள்ளது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் திருச்சி கிழக்குத் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் ராஜசேகரன், தற்போது அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்திருப்பது எடப்பாடி பழனிசாமிக்கு ஒரு மிகப்பெரிய அதிர்ச்சி வைத்தியமாகப் பார்க்கப்படுகிறது.

ராஜசேகரன் சாதாரணத் தொண்டர் மட்டுமல்ல, திருச்சி மாநகர அதிமுகவின் பொருளாளர் என்ற முக்கியப் பொறுப்பிலும் இருந்தவர். கடந்த தேர்தலில் திருச்சி கிழக்குத் தொகுதியில் நட்சத்திர வேட்பாளராகக் களம் இறங்கிய முதல்வர் விஜய்யை எதிர்த்துத் தீவிரமாகப் பணியாற்றியவர்.

அந்தத் தேர்தலில் சுமார் 19,715 வாக்குகள் வித்தியாசத்தில் அவர் தோல்வியடைந்திருந்தாலும், திருச்சியில் அதிமுகவின் முக்கிய முகமாகவே வலம் வந்தார். இப்போது தனது கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் ராஜினாமா செய்வதாக அவர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். முதல்வர் விஜய்யால் காலி செய்யப்பட்ட திருச்சி கிழக்குத் தொகுதிக்கு மிக விரைவில் இடைத்தேர்தல் வரவுள்ள நிலையில், அதே தொகுதியின் வேட்பாளரே கட்சியிலிருந்து வெளியேறுவது அதிமுக தொண்டர்களிடையே ஒருவித சோர்வை ஏற்படுத்தியுள்ளது.

சமீபகாலமாக அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் பலர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு, முதல்வர் விஜய் தலைமையிலான தவெக-வில் ஐக்கியமாகி வருகின்றனர். ஏற்கனவே சி.விஜயபாஸ்கர் மற்றும் எம்.ஆர்.விஜயபாஸ்கர் போன்ற சீனியர் தலைவர்கள் தவெக பக்கம் சாய்ந்துவிட்ட நிலையில், தற்போது ராஜசேகரனும் அதே பாதையைப் பின்பற்றுவாரோ என்ற சந்தேகம் வலுத்துள்ளது. அவர் தனது அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து இன்னும் வெளிப்படையாக அறிவிக்கவில்லை என்றாலும், அவரது ஆதரவாளர்கள் பலர் தவெக நிர்வாகிகளுடன் தொடர்பில் இருப்பதாகத் திருச்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கட்சியைப் பலப்படுத்த எடப்பாடி பழனிசாமி எத்தனையோ முயற்சிகளை எடுத்தாலும், அடிமட்ட அளவில் நிலவும் அதிருப்தியும், தவெக-வின் அசுர வளர்ச்சியும் நிர்வாகிகளை மாற்றுப் பாதையை நோக்கிச் சிந்திக்க வைத்துள்ளது. திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடத் தகுதியான ஒரு வலுவான வேட்பாளரைத் தேடும் நிலைக்கு இப்போது கட்சி தள்ளப்பட்டுள்ளது.

ராஜசேகரனின் இந்தத் திடீர் விலகல் வெறும் தனிநபர் முடிவுதானா அல்லது திருச்சியில் அதிமுகவின் ஒட்டுமொத்தக் கட்டமைப்பிலும் ஒரு மாற்றத்தை ஏற்படுத்துமா என்பது வரும் நாட்களில் தெரிந்துவிடும். தமிழக அரசியலில் அடுத்தடுத்து விழும் இந்த விக்கெட்டுகள், திராவிடக் கட்சிகளுக்கு ஒரு மிகப்பெரிய எச்சரிக்கை மணியாகவே பார்க்கப்படுகிறது.

Related News

Latest News