செயற்கை நுண்ணறிவு எனப்படும் ஏ.ஐ தொழில்நுட்பத்தின் அபரிமிதமான வளர்ச்சியால், எதிர்காலத்தில் மனிதர்களின் வேலைவாய்ப்புகள் பறிபோகுமா என்ற அச்சம் உலகெங்கும் நிலவி வருகிறது. குறிப்பாக, மேலாண்மை மற்றும் நிர்வாகம் சார்ந்த பணிகளை ரோபோக்களே செய்துவிடும் என்ற வாதங்கள் முன்வைக்கப்படும் வேளையில், அதற்கு நேர்மாறான ஒரு நம்பிக்கையூட்டும் அறிக்கையை வெளியிட்டுள்ளது.
ஜிமேக் (GMAC) எனப்படும் சர்வதேச பட்டதாரி மேலாண்மை கல்வி கவுன்சில். சுமார் 39 நாடுகளில் உள்ள உலகின் மிகப்பெரிய நிறுவனங்களின் வேலைவாய்ப்பு வழங்குநர்களிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், ஏ.ஐ தொழில்நுட்பம் எவ்வளவு வளர்ந்தாலும், எம்பிஏ உள்ளிட்ட மேலாண்மை பட்டதாரிகளின் தேவை முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு அதிகரித்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.
இந்த அறிக்கையின்படி, 2025-ஆம் ஆண்டில் 99 சதவீத நிறுவனங்கள் மேலாண்மை பட்டதாரிகள் மீது முழு நம்பிக்கை வைத்திருந்த நிலையில், 2026-ஆம் ஆண்டில் ஒரு நிறுவனம் கூட எம்பிஏ பட்டதாரிகளின் திறமை மீது சந்தேகம் கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் ஏ.ஐ கருவிகளை நிறுவனங்கள் தங்களது செயல்பாடுகளில் புகுத்தும்போது, அவற்றைச் சரியாகக் கையாண்டு நிறுவனத்தை வழிநடத்த ஒரு தேர்ந்த மேலாண்மை பட்டதாரி அவசியம் எனப் பாதிக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கருதுகின்றன.
ஏ.ஐ தொழில்நுட்பத்தால் தரவுகளை ஆய்வு செய்யவும், அன்றாட வேலைகளைத் தானியங்கி முறையில் செய்யவும் முடியுமே தவிர, மனிதர்களுக்கே உரித்தான தனித்துவமான பண்புகளை அதனால் பிரதிபலிக்க முடியாது என்பதே இதற்கு அடிப்படை காரணமாகும்.
குறிப்பாக, தகவல் தொடர்புத் திறன், இக்கட்டான சூழலுக்கு ஏற்பத் தன்னை மாற்றிக்கொள்ளும் தன்மை மற்றும் உணர்ச்சிகளைப் புரிந்து செயல்படும் ‘எமோஷனல் இன்டெலிஜென்ஸ்’ (Emotional Intelligence) போன்ற திறன்கள், இயந்திரங்களால் ஒருபோதும் ஈடு செய்ய முடியாதவை.
உலகளாவிய சிக்கல்களைக் கையாளுவதிலும், மனித உணர்வுகளோடு கலந்த வணிக முடிவுகளை எடுப்பதிலும் எம்பிஏ பட்டதாரிகள் சிறந்த விளங்குவதாகத் தேடுதல் நிறுவனங்கள் பாராட்டியுள்ளன. இருப்பினும், இந்த ஆய்வில் ஒரு எச்சரிக்கை மணியும் ஒலிக்கப்பட்டுள்ளது. இன்றைய இளம் பட்டதாரிகளிடம் பணி ஒழுக்கம், நம்பகத்தன்மை மற்றும் பொறுப்புணர்வு போன்ற பண்புகள் கடந்த ஆண்டுகளை விடக் குறைந்து வருவதாக நிறுவனங்கள் கவலை தெரிவித்துள்ளன.
எனவே, வருங்காலப் போட்டி நிறைந்த உலகில் வெற்றி பெற வேண்டுமானால், வெறும் பட்டப்படிப்பு மட்டும் போதாது; தொழில்நுட்ப அறிவோடு மனித நேயத்தையும், தலைமைப் பண்பையும் இணைக்க வேண்டியது அவசியம் என இந்த அறிக்கை வலியுறுத்துகிறது. தொழில்நுட்பப் புலமையும், மனிதப் புத்திசாலித்தனமும் இணையும் புள்ளியில் செயல்படும் பட்டதாரிகளுக்கே இனி உலக நிறுவனங்கள் சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்கும்.
சுருக்கமாகச் சொன்னால், ஏ.ஐ என்பது மனிதர்களுக்குப் போட்டியாளர் அல்ல, அது மனிதத் திறனை மேம்படுத்தும் ஒரு கருவி மட்டுமே என்பதை உணர்ந்து செயல்படுபவர்களுக்கு வேலைவாய்ப்பு சந்தையில் எப்போதும் ராஜமரியாதை உண்டு.
