மொத்தமாக மாறப்போகும் ‘சென்னை’! மெட்ரோவுக்கே டஃப் கொடுக்கும் ‘BRTS’ வசதி ?

சென்னை மாநகரின் போக்குவரத்து நெரிசலுக்கு முற்றுப்புள்ளி வைக்க, தென் கொரியா மற்றும் சிங்கப்பூர் போன்ற நாடுகளில் வெற்றிகரமாகச் செயல்பட்டு வரும் ‘பி.ஆர்.டி.எஸ்’ (BRTS) எனப்படும் அதிவேக பேருந்து போக்குவரத்துத் திட்டத்தைச் சென்னையில் அமல்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான விரிவான சாத்தியக்கூறு ஆய்வை மேற்கொள்ளச் சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து ஆணையம் தற்போது தமிழக அரசிடம் நிதி கோரியுள்ளது.

அலுவலகம் செல்வோர் முதல் பள்ளி மாணவர்கள் வரை அனைவரும் சந்திக்கும் தினசரி டிராபிக் சிக்கலுக்கு இது ஒரு நிரந்தரத் தீர்வாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 10 கிலோமீட்டர் தூரத்தைக் கடக்க ஒரு மணி நேரத்திற்கும் மேலாகும் இன்றைய சூழலில், இந்தப் புதிய திட்டம் சென்னையின் பயண வேகத்தையே மாற்றியமைக்கப் போகிறது.

முதற்கட்டமாக, சென்னை பல்லாவரம் முதல் துரைப்பாக்கம் வரையிலான 11 கிலோமீட்டர் தொலைவிற்கு இந்தத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இந்தச் சாலை சுமார் 60 மீட்டர் அகலம் கொண்டிருப்பதால், பேருந்துகள் மட்டும் செல்வதற்காகப் பிரத்யேகமான தனி வழித்தடத்தை உருவாக்க முடியும். மற்ற வாகனங்கள் உள்ளே நுழையாதபடி இந்த வழித்தடத்தைச் சுற்றித் தடுப்புகள் அமைக்கப்படும்.

தற்போது சென்னைப் பேருந்துகளின் சராசரி வேகம் வெறும் 12 முதல் 15 கிலோமீட்டராக இருக்கும் நிலையில், இந்தத் திட்டம் நடைமுறைக்கு வந்தால் பேருந்துகளின் வேகம் 40 கிலோமீட்டராக உயரும். அதாவது, ஒரு மணி நேரப் பயணத்தை வெறும் 15 முதல் 20 நிமிடங்களில் கடக்க முடியும் என்பதுதான் இதில் இருக்கும் மிகப்பெரிய சிறப்பம்சம்.

இந்தத் திட்டத்தின் மற்றொரு ஹைலைட் என்னவென்றால், இதில் பயன்படுத்தப்படும் நவீன சிக்னல் தொழில்நுட்பம். பேருந்து சிக்னலை நெருங்கும் போது, அந்தப் பேருந்திற்கு மட்டும் தானாகவே பச்சை விளக்கு எரியும் வகையில் சென்சார்கள் பொருத்தப்படும். மெட்ரோ ரயிலோடு ஒப்பிடும்போது, இந்தத் திட்டத்தை மிகக் குறைந்த செலவில் செயல்படுத்த முடியும் என்பதால், டிக்கெட் விலையும் சாமானிய மக்களுக்கு எட்டும் வகையிலேயே இருக்கும்.

இந்த 11 கிலோமீட்டர் திட்டம் வெற்றி பெற்றால், அடுத்தகட்டமாக நீலாங்கரை-பல்லாவரம் மற்றும் வண்டலூர்-மீஞ்சூர் வெளிவட்டச் சாலை எனச் சென்னையின் பல பகுதிகளுக்கு இத்திட்டத்தை விரிவுபடுத்த போக்குவரத்துத் துறை திட்டமிட்டுள்ளது.

இருப்பினும், பிராட்வே முதல் பூந்தமல்லி வரையிலான அடுத்தகட்ட விரிவாக்கத்தில் சில இடநெருக்கடி சவால்கள் உள்ளன. பல இடங்களில் சாலைகளின் அகலம் மிகக் குறைவாக இருப்பது ஒரு சிக்கலாகப் பார்க்கப்பட்டாலும், நவீன இன்ஜினியரிங் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி இந்தத் திட்டத்தைச் சாத்தியமாக்க அதிகாரிகள் தீவிரமாக முயன்று வருகின்றனர்.

நாளொன்றுக்குச் சுமார் 35 லட்சம் பேர் பேருந்துகளைப் பயன்படுத்தும் சென்னை மாநகரில், மெட்ரோ ரயிலுக்கு இணையாக ஒரு அதிவேக பேருந்து வசதி கிடைப்பது ஒரு மாபெரும் வரப்பிரசாதமாகவே அமையும். சென்னையின் முகத்தையே மாற்றப்போகும் இந்த ‘பி.ஆர்.டி.எஸ்’ திட்டம், தமிழகப் போக்குவரத்து வரலாற்றில் ஒரு புதிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.

Related News

Latest News