‘செந்தில் பாலாஜி’ தம்பி மீது பாய்ந்த 4 வழக்குகள்! FIR-ல் உள்ள திடுக்கிடும் ரகசியங்கள்!

தமிழக அரசியல் களம் தற்போது ஒரு மிகப்பெரிய ‘குதிரை பேர’ விவாதத்தால் அனல் பறந்து கொண்டிருக்கிறது. முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழக அரசுக்குச் சட்டசபையில் தனிப்பெரும்பான்மை கிடைக்காத சூழலைச் சாதகமாகப் பயன்படுத்தி, அக்கட்சியின் எம்எல்ஏ-க்களை வளைக்க எதிர்க்கட்சிகள் திரைமறைவில் காய் நகர்த்தி வருவதாகக் கூறப்படும் புகார்கள் தற்போது உண்மையாகத் தொடங்கியுள்ளன.

குறிப்பாக, ஊத்தங்கரை தொகுதி தவெக எம்எல்ஏ இளையராஜா அளித்த அதிரடி புகாரின் அடிப்படையில், திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது காவல்துறை நான்கு முக்கியப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளது. சட்டசபையில் சபாநாயகருக்கு எதிராகக் கொண்டு வரப்படவுள்ள தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தால், 35 கோடி ரூபாய் தருவதாக ஆசை காட்டியது தான் இந்த விவகாரத்தின் மையப்பொருள்.

எம்எல்ஏ இளையராஜா அளித்த புகாரைத் தொடர்ந்து, திருவல்லிக்கேணி காவல்துறையினர் நடத்திய அதிரடி வேட்டையில் ஏற்கனவே ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கருத்துக்கணிப்பு நிறுவனத்தை நடத்தி வரும் திருநாவுக்கரசு, திருச்சியைச் சேர்ந்த நரேஷ், மேடவாக்கத்தைச் சேர்ந்த தியாகராஜன் உள்ளிட்டோர் இதில் அடங்குவர்.

இந்த விவகாரத்தின் முக்கியப் புள்ளியாகக் கருதப்படும் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக் குமார், கைதான நரேஷை சென்னையில் நேரில் சந்தித்துப் பேசியதாகவும், செந்தில் பாலாஜி மற்றும் அசோக் குமார் ஆகியோரின் நேரடித் தூண்டுதலின் பேரிலேயே இந்த 35 கோடி ரூபாய் பேரம் பேசப்பட்டதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் பதியப்பட்டுள்ள எப்ஐஆர் விபரங்கள் இப்போது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கைதானவர்கள் மற்றும் அசோக் குமார் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் 7 மற்றும் 12 ஆகிய பிரிவுகளின் கீழும், புதிய பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தின் 318(4) மற்றும் 351(2) ஆகிய பிரிவுகளின் கீழும் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

இதில் பிரிவு 7 என்பது ஒரு பொது ஊழியருக்கு லஞ்சம் கொடுத்து அவரது கடமையைத் தவறாகச் செய்யத் தூண்டுவதைக் குறிக்கும். அதேபோல், பழைய ஐபிசி 420-க்கு மாற்றாகக் கொண்டு வரப்பட்டுள்ள 318(4) என்ற பிரிவின் கீழ் மோசடி குற்றமும், 351(2) என்ற பிரிவின் கீழ் கொலை மிரட்டல் விடுத்த குற்றமும் சுமத்தப்பட்டுள்ளது. பேரத்திற்குச் சம்மதிக்காவிட்டால் எம்எல்ஏ-வின் குடும்பத்தையே கொலை செய்து விடுவோம் என மிரட்டியது இந்த வழக்கை இன்னும் தீவிரமாக்கியுள்ளது.

தமிழக அரசியலில் ஆட்சி அமைந்த சில வாரங்களிலேயே இத்தனை பெரிய தொகைக்கு எம்எல்ஏ-வை வளைக்க முயன்றது ஜனநாயகத்திற்கு விடப்பட்ட சவாலாகவே பார்க்கப்படுகிறது. தலைமறைவாக இருக்கும் அசோக் குமாரைத் தேடும் பணியைத் தனிப்படை போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர். ஒருபுறம் திமுக இந்தத் குற்றச்சாட்டுகளை மறுத்து வந்தாலும், கைதான நபர்கள் செந்தில் பாலாஜியின் தீவிர ஆதரவாளர்கள் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் இன்னும் யாரெல்லாம் பின்னணியில் இருக்கிறார்கள் என்ற விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளதால், அறிவாலய வட்டாரத்தில் மேலும் பல விக்கெட்டுகள் விழும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு கருப்புப் புள்ளியாக மாறியுள்ள இந்த குதிரை பேர விவகாரம் வரும் நாட்களில் இன்னும் பல அதிரடித் திருப்பங்களைச் சந்திக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related News

Latest News