ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையேயான போர் நான்கு ஆண்டுகளை நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில், போர்க்களத்தில் இருந்து வெளியாகும் ஒரு புதிய ஆய்வறிக்கை ஒட்டுமொத்த உலகையும் அதிர வைத்துள்ளது. உக்ரைன் போரின் மிகத்தீவிரமான முன்னணிக் களங்களில் (Frontlines) சண்டையிடச் செல்லும் ஒரு சராசரி ரஷ்ய வீரரின் ஆயுட்காலம் வெறும் 20 முதல் 35 நிமிடங்கள் மட்டுமே என்று ரஷ்யாவின் போர் பதிவர்களே (War Bloggers) வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.
நவீன தொழில்நுட்பம் மற்றும் உக்ரைனின் இடைவிடாத ட்ரோன் தாக்குதல்கள் காரணமாக, ரஷ்ய ராணுவத்தின் பலம் நாளுக்கு நாள் சிதைந்து வருவதையே இந்தத் தரவுகள் காட்டுகின்றன. இந்தத் துயரத்திற்கு மிக முக்கியக் காரணமாகக் கருதப்படுவது ரஷ்ய வீரர்களுக்கு வழங்கப்படும் மிகக் குறுகிய காலப் பயிற்சியாகும். பொதுவாக ஒரு ராணுவ வீரர் போர்க்களத்திற்குச் செல்ல நீண்ட காலப் பயிற்சி தேவைப்படும் நிலையில், ரஷ்யாவோ வெறும் 10 முதல் 21 நாட்கள் மட்டுமே பயிற்சியளித்து புதிய வீரர்களைப் போர்க்களத்திற்கு அனுப்பி வருகிறது.
முறையான தற்காப்பு மற்றும் தாக்குதல் உத்திகளை முழுமையாகக் கற்காத நிலையில், அவர்கள் உக்ரைனின் அதிநவீன ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளுக்கு மிக எளிதாகப் பலியாகின்றனர். குறிப்பாக, ஒரு மாதத்திற்குச் சுமார் 30,000 ரஷ்ய வீரர்கள் உயிரிழப்பதாக வெளியாகி வரும் தகவல்கள், ரஷ்ய ராணுவத்திற்கு ஏற்பட்டுள்ள ஈடு செய்ய முடியாத இழப்பை உணர்த்துகின்றன.
தற்போதுள்ள இந்த மனிதவளப் பற்றாக்குறையைச் சரிசெய்ய, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மீண்டும் ஒருமுறை நாடு தழுவிய ராணுவத் திரட்டலுக்கு (Mobilization) உத்தரவிடக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே போரில் ஈடுபட்டிருந்த 3 லட்சம் வீரர்களில் பெரும்பாலோர் உயிரிழந்தோ அல்லது படுகாயமடைந்தோ ஓய்ந்துவிட்ட நிலையில், வரும் இலையுதிர் காலத்திற்குள் (Autumn) புதிய வீரர்களைத் திரட்ட வேண்டிய கட்டாயத்தில் ரஷ்யா உள்ளது.
இருப்பினும், உக்ரைன் தற்போது ரஷ்யாவின் எல்லைகளுக்குள் புகுந்து எரிபொருள் கிடங்குகள், ஆயுதத் தொழிற்சாலைகள் மற்றும் விநியோகச் சங்கிலிகளைச் சிதைத்து வருவதால், வெறும் ஆள் பலத்தை மட்டும் வைத்துக் கொண்டு ரஷ்யாவால் இந்தப் போரில் வெற்றி பெற முடியுமா என்பது பெரும் சந்தேகமாகவே உள்ளது.
போர்க்களத்தில் நிலவும் இந்தத் துயரமான சூழல் ரஷ்யாவிற்குள் ஒருவித அதிருப்தியையும், அச்சத்தையும் உருவாக்கியுள்ளது. வெறும் 20 நிமிடங்களில் வாழ்க்கை முடிந்துவிடும் என்ற நிலையில், ராணுவத்தில் சேரப் பலரும் அஞ்சும் நிலை ஏற்பட்டுள்ளது. ஒருபுறம் உக்ரைனின் நவீன ட்ரோன் தாக்குதல்கள், மறுபுறம் ரஷ்யாவின் மோசமடைந்து வரும் பொருளாதாரம் எனப் புதின் அரசாங்கம் இக்கட்டான சூழலில் சிக்கியுள்ளது.
இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வர அமைதிப் பேச்சுவார்த்தைகள் ஒருபுறம் பேசப்பட்டாலும், களத்தில் மடிந்து விழும் வீரர்களின் எண்ணிக்கை மட்டும் குறைந்தபாடில்லை. சர்வதேச அரசியல் அரங்கில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ள இந்த அறிக்கை, உக்ரைன் போரின் கோர முகத்தை மீண்டும் ஒருமுறை உலகிற்குத் தோலுரித்துக் காட்டியுள்ளது.
