தமிழக வெற்றிக் கழகத் தலைவர் மற்றும் நடிகரான விஜய் தனது பிறந்தநாளை கடந்த ஜூன் 22ஆம் தேதி கொண்டாடினார். அவருக்கு திரையுலக பிரபலங்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், ரசிகர்கள் என பலரும் சமூக வலைத்தளங்கள் வாயிலாக வாழ்த்து தெரிவித்தனர். தமிழக சட்டசபையிலும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
விஜய்க்கு ஆண்டுதோறும் வித்தியாசமான முறையில் வாழ்த்து தெரிவித்து வரும் நடிகை திரிஷா கிருஷ்ணன் இந்த ஆண்டும் தனது இன்ஸ்டாகிராம் பதிவின் மூலம் கவனம் பெற்றுள்ளார். கடந்த 2023ஆம் ஆண்டு, லியோ படத்தின் காஷ்மீர் படப்பிடிப்பு தளத்தில் விஜய்யுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பகிர்ந்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்திருந்தார். அப்போது “முடிவில்லாத காதல்” என்பதை குறிக்கும் எமோஜிகளையும் இணைத்திருந்தார்.

அதேபோல் 2024ஆம் ஆண்டு, லிப்டில் விஜய்யுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்த த்ரிஷா, “புயலுக்குப் பின் அமைதி, அமைதிக்குப் பின் புயல்! இன்னும் பல மைல்கற்கள் காத்திருக்கின்றன” என்று பதிவிட்டு, விஜய்யின் அரசியல் பயணத்தை மறைமுகமாக குறிப்பிட்டிருந்தார். அந்த பதிவிலும் “முடிவில்லாத காதல்” குறியீடு இடம்பெற்றது.

2025ஆம் ஆண்டு, தனது செல்ல நாய் இஸ்ஸியை விஜய் கொஞ்சும் புகைப்படத்தை பகிர்ந்த த்ரிஷா, “பிறந்தநாள் வாழ்த்துகள் என் அன்புக்குரியவரே” என்று பதிவிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

இந்த நிலையில், இந்த ஆண்டு ஜூன் 23ஆம் தேதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்த த்ரிஷா, “To the person who makes it all worth it,HBD” என்று குறிப்பிட்டார். மேலும், விஜய்யுடன் இணைந்து 6 கேக்குகளை வெட்டி கொண்டாடிய புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதனிடையே, நடிகை சார்மி கவுர் அந்த பதிவின் கருத்துப் பகுதியில் “இருவரும் தங்கமான ஜோடி… புரட்சியாளர்கள்” என்று பதிவிட்டுள்ளார். அவரது இந்த கருத்தும் ரசிகர்கள் மத்தியில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தி, சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.

