இமயமலையின் பனிச்சிகரங்களுக்கு இடையே, கடல் மட்டத்திலிருந்து சுமார் 15 ஆயிரம் அடி உயரத்தில் ஒரு விசித்திரமான உயிர் வளர்கிறது. “யார்சா கும்பா” என்று அழைக்கப்படும் இது, உள்ளூர் மக்களால் “கீடா ஜாடி” என்றும், உலக சந்தையில் “இமயமலை தங்கம்” என்றும் வர்ணிக்கப்படுகிறது. பார்ப்பதற்குப் பாதி புழுவாகவும், பாதி செடியாகவும் காட்சியளிக்கும் இந்த அபூர்வப் பொருள், சர்வதேச சந்தைகளில், குறிப்பாகச் சீனாவில் ஒரு கிலோ 15 முதல் 20 லட்சம் ரூபாய் வரை விலை போகிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? தங்கம் மற்றும் வைரத்திற்கு இணையான விலையில் விற்கப்படும் இந்த உயிரினத்திற்குப் பின்னால் ஒரு ஆச்சரியமான இயற்கையின் ரகசியம் ஒளிந்துள்ளது.
உண்மையில் இது ஒரு பூஞ்சைக் காளான் வகையைச் சேர்ந்தது. குளிர்காலங்களில் மண்ணுக்கு அடியில் இருக்கும் ‘கோஸ்ட் மாத்’ (Ghost Moth) என்ற அந்துப்பூச்சியின் புழுக்களுக்குள் இந்த பூஞ்சை புகுந்து, அவற்றை மெல்ல மெல்லத் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும். வசந்த காலத்தில் பனி உருகத் தொடங்கும்போது, அந்தப் புழுவின் தலையிலிருந்து ஒரு சிறிய செடி போல இது வெளியே வளரத் தொடங்கும். இந்த விசித்திரமான வளர்ச்சியைத் தேடித்தான் நேபாளம் மற்றும் திபெத்தில் உள்ள ஆயிரக்கணக்கான கிராம மக்கள் ஒவ்வொரு ஆண்டும் மே முதல் ஜூலை வரை இமயமலையின் அபாயகரமான சிகரங்களை நோக்கிப் படையெடுக்கிறார்கள். இந்தக் காலக்கட்டத்தில் அங்குள்ள பள்ளிகள் மூடப்பட்டு, குழந்தைகளும் முதியவர்களும் கூடத் தங்களது வாழ்வாதாரத்திற்காக இந்தப் புழுக்களைத் தேடிச் செல்கின்றனர்.
இதனைத் தேடுவது ஒரு சவாலான காரியம். புற்களுக்கு இடையே மிகச் சிறிய அளவில் மறைந்திருக்கும் இந்தப் புழுக்களைக் கண்டறிய மக்கள் பனித்தரையில் தவழ்ந்து கொண்டே தேட வேண்டியிருக்கும். பனி உருகும் சில வாரங்களுக்குள் இவற்றைச் சேகரிக்காவிட்டால், அவை அழுகிவிடும் அல்லது வனவிலங்குகளுக்கு உணவாகிவிடும். “இமயமலை வயாக்ரா” என்று அழைக்கப்படும் இதற்குச் சர்வதேச அளவில் இவ்வளவு மவுசு இருப்பதற்குக் காரணம், இதன் அபரிமிதமான மருத்துவ குணங்கள் தான். குறிப்பாகப் பாலியல் குறைபாடுகளைத் தீர்க்கும் பாரம்பரிய மருந்தாக இது பல நூற்றாண்டுகளாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இது மட்டுமல்லாமல், உடலில் ஆற்றலை அதிகரிக்கும் ஏடிபி (ATP) உற்பத்தியைத் தூண்டுவது, நோய் எதிர்ப்புச் சக்தியை வலுப்படுத்துவது மற்றும் நுரையீரலில் ஆக்சிஜன் பயன்பாட்டைச் சீரமைப்பது எனப் பல நன்மைகளை இது வழங்குகிறது. ஆஸ்துமா, மூச்சுக்குழாய் அழற்சி போன்ற நோய்களுக்கு இது ஒரு சிறந்த தீர்வாகக் கருதப்படுகிறது. உயிருக்கு ஆபத்தான கடும் குளிரிலும், பனிச் சரிவுகளுக்கு இடையிலும் மக்கள் இதனைத் தேடிச் செல்வதற்குக் காரணம், ஒரு வருடம் முழுவதும் உழைத்துக் கிடைக்கும் ஊதியத்தை விட, இந்த இரண்டு மாத அறுவடையில் அவர்களுக்குக் கிடைக்கும் வருமானம் பல மடங்கு அதிகம் என்பதே நிதர்சனமான உண்மை.
