இன்றைய காலத்தில் பணத்தை கையில் வைத்துச் செலவு செய்வதை விட டிஜிட்டல் பரிவர்த்தனைகளையே பெரும்பாலானோர் விரும்புகின்றனர். QR கோடு ஸ்கேன் செய்து பணம் செலுத்துவது அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாறிவிட்டது. குறிப்பாக UPI சேவைகள் வளர்ச்சியடைந்த பிறகு, சிறிய கடைகள் முதல் பெரிய வர்த்தக நிறுவனங்கள் வரை டிஜிட்டல் கட்டண முறையை ஏற்றுக்கொண்டுள்ளன.
இந்த நிலையில், PhonePe தனது வாலட் பயனர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. நீண்ட காலமாக பயன்படுத்தப்படாமல் இருக்கும் PhonePe Wallet-களுக்கு பராமரிப்பு கட்டணம் வசூலிக்கப்படும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.
PhonePe வெளியிட்ட தகவலின்படி, தொடர்ந்து 365 நாட்கள் எந்தவொரு வாலட் பரிவர்த்தனையும் செய்யாமல் இருந்தால் அந்த வாலட் செயலற்றதாக (Inactive) கருதப்படும். இவ்வாறு செயலற்றதாக இருக்கும் வாலட்களுக்கு ஒவ்வொரு காலாண்டுக்கும் ரூ.100 பராமரிப்பு கட்டணம் வசூலிக்கப்படும். இதில் ஜிஎஸ்டியும் அடங்கும்.
குறிப்பாக, UPI மூலம் பணம் அனுப்புவது, மொபைல் ரீசார்ஜ் செய்வது, பில் கட்டணம் செலுத்துவது அல்லது PhonePe செயலியில் உள்நுழைவது போன்றவை வாலட் செயல்பாடாக கருதப்படாது. PhonePe Wallet-ஐ நேரடியாக பயன்படுத்தி பரிவர்த்தனை செய்தால்தான் அது வாலட் ஆக்டிவிட்டியாக கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.
பராமரிப்பு கட்டணம் வசூலிப்பதற்கு சுமார் 15 நாட்களுக்கு முன்பு பயனர்களுக்கு அறிவிப்பு அனுப்பப்படும். அந்த காலக்கெடுவுக்குள் வாலட் மூலம் ஒரு பரிவர்த்தனை செய்துவிட்டால், வாலட் மீண்டும் செயல்பாட்டில் இருப்பதாக கருதப்பட்டு கட்டணம் விதிக்கப்படாது.
வாலட்டில் ரூ.100 அல்லது அதற்கு மேல் இருப்பு இருந்தால் கட்டணம் அதிலிருந்து கழிக்கப்படும். ரூ.100-க்கும் குறைவான தொகை இருந்தால், இருப்பில் உள்ள தொகை மட்டும் பிடித்தம் செய்யப்பட்டு கணக்கு பூஜ்யமாக மாற்றப்படும். ஆனால் வாலட் கணக்கு மைனஸ் நிலைக்கு செல்லாது என PhonePe விளக்கம் அளித்துள்ளது.
ஏற்கனவே Mobikwik மற்றும் Airtel Payments Bank போன்ற நிறுவனங்கள் இதேபோன்ற நடைமுறையை பின்பற்றியுள்ள நிலையில், தற்போது PhonePe-யும் அதே வழியை தேர்வு செய்துள்ளது.
