அதிமுகவை விட்டு தவெக-வில் இணையும் செல்லூர் ராஜூ? – அவரே கொடுத்த அதிரடி விளக்கம்!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவின் எதிர்பாராத பின்னடைவைத் தொடர்ந்து, அந்தத் கட்சியின் மூத்த நிர்வாகிகள் பலரும் ஆளுங்கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தை நோக்கி நகரத் தொடங்கியுள்ளனர். இந்தச் சூழலில், அதிமுகவின் மிக முக்கியமான முகமாகவும், முன்னாள் அமைச்சராகவும் இருக்கும் செல்லூர் ராஜூவும் தவெக-வில் இணையப்போவதாக கடந்த சில நாட்களாகத் தகவல்கள் காட்டுத்தீயாய் பரவி வந்தன.

மதுரை மேற்குத் தொகுதியில் தவெக வேட்பாளரிடம் தோல்வியைத் தழுவிய செல்லூர் ராஜூ, அதிமுகவின் தற்போதைய தலைமை மீது அதிருப்தியில் இருப்பதாகவும், அதனால்தான் அவர் கட்சி மாறத் திட்டமிடுகிறார் என்றும் அரசியல் வட்டாரங்களில் செய்திகள் வெளியாகி அதிமுக தொண்டர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்தப் பரபரப்புகளுக்குத் தற்பொழுது செல்லூர் ராஜூவே தனது பாணியில் ஒரு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். தனது எக்ஸ் தளத்தில் ஒரு பதிவைப் பகிர்ந்துள்ள அவர், “ஏப்பா, ஏய்! எத்தனை கட்சியிலப்பா சேர்ப்பீங்க?” எனத் தனது டிரேட்மார்க் நகைச்சுவைப் பாணியில் கேள்வி எழுப்பியுள்ளார். தான் ஒருபோதும் அதிமுகவை விட்டு விலகப்போவதில்லை என்பதைத் தெளிவுபடுத்தியுள்ள அவர், “ஏழைகளின் நன்மைக்காக புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் உருவாக்கிய அதிமுகதான் எனது வழி” என்றும், எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் வழியிலேயே தனது அரசியல் பயணம் என்றும் உறுதியளித்துள்ளார்.

முன்னதாகச் செய்தியாளர்களைச் சந்தித்தபோதும் இரட்டை இலை சின்னத்தைச் சைகையாகக் காட்டி, வதந்திகளுக்கு அவர் ஏற்கனவே முற்றுப்புள்ளி வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. அதே சமயம், செல்லூர் ராஜூ போன்ற அதிமுகவின் மூத்த நிர்வாகிகளைத் தவெக-வில் இணைப்பதற்கு அந்தப் பக்கத்திலிருந்தும் சில எதிர்ப்புகள் கிளம்பியதாகத் தகவல்கள் கசிகின்றன. குறிப்பாக, மதுரையைச் சேர்ந்த சிடிஆர் நிர்மல் குமார் போன்ற தவெக நிர்வாகிகள், அதிமுகவின் மூத்த தலைவர்களைக் கட்சிக்குள் சேர்ப்பதில் அதிக விருப்பமின்றி இருப்பதாகக் கூறப்படுகிறது.

செல்லூர் ராஜூவின் தோல்விக்குக் காரணமான தவெக வேட்பாளர் எஸ்.ஆர். தங்கப்பாண்டியன் வெற்றி பெற்ற சூழலில், அதே தொகுதியின் முன்னாள் அமைச்சரைத் தவெக-விற்குள் கொண்டு வருவது தேவையற்ற குழப்பங்களை விளைவிக்கும் எனத் தவெக தலைமை கருதுவதாகவும் சொல்லப்படுகிறது.

எது எப்படியோ, செல்லூர் ராஜூவின் இந்த அதிரடி விளக்கத்தால் அதிமுக தொண்டர்கள் தற்பொழுது பெரும் நிம்மதி அடைந்துள்ளனர். கட்சியில் இருந்து நிர்வாகிகள் வெளியேறி வரும் இக்கட்டான சூழலில், செல்லூர் ராஜூ போன்ற ஒரு மூத்த தலைவர் “கட்சி மாறமாட்டேன்” என்று கொடுத்திருக்கும் உறுதிமொழி அதிமுகவிற்குச் சற்று புத்துயிர் அளிக்கும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. மதுரையின் அரசியல் களத்தில் செல்லூர் ராஜூவின் இந்த முடிவு, அதிமுகவின் பிடியைத் தொடர்ந்து தக்கவைக்க உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related News

Latest News