ஆதார் கார்டு வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு..

இந்தியாவில் ஆதார் கார்டு மிக முக்கியமான அடையாள ஆவணமாக பயன்படுத்தப்படுகிறது. புதிய சிம் கார்டு வாங்குவது முதல் வங்கி கணக்கு தொடங்குவது, அரசு நலத்திட்டங்களுக்கு விண்ணப்பிப்பது வரை பல்வேறு சேவைகளுக்கு ஆதார் அவசியமாக உள்ளது. இருப்பினும், பலர் இன்னும் காகித வடிவிலான ஆதார் கார்டையே பயன்படுத்தி வருகின்றனர். இது எளிதில் கிழிவது, நனைவது போன்ற பிரச்சனைகளை சந்திக்கக்கூடும்.

இந்த சிக்கல்களுக்கு தீர்வாக இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) ஆதார் PVC கார்டை வழங்குகிறது. இது டெபிட் அல்லது ஏடிஎம் கார்டு போன்ற உறுதியான பிளாஸ்டிக் கார்டாக இருக்கும். பெயர், புகைப்படம், பிறந்த தேதி, முகவரி உள்ளிட்ட அனைத்து ஆதார் விவரங்களும் இதில் இடம்பெற்றிருக்கும். நீடித்த பயன்பாட்டிற்கு ஏற்ற இந்த கார்டை பர்ஸ் அல்லது வாலெட்டில் எளிதாக வைத்துச் செல்லலாம்.

ஆதார் PVC கார்டைப் பெற பதிவு மையங்களுக்கு செல்ல வேண்டிய அவசியமில்லை. வீட்டிலிருந்தபடியே ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இதற்கான கட்டணம் பேக்கேஜிங் மற்றும் டெலிவரி செலவுகள் உட்பட ரூ.75 மட்டுமே.

விண்ணப்பிக்க, UIDAI-யின் அதிகாரப்பூர்வ இணையதளத்துக்குச் சென்று “Order Aadhaar PVC Card” சேவையைத் தேர்வு செய்ய வேண்டும். பின்னர் ஆதார் எண் மற்றும் தேவையான விவரங்களை பதிவு செய்து, கேப்ட்சா குறியீட்டை உள்ளிட வேண்டும். ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணுக்கு வரும் OTP-ஐ சரிபார்த்த பிறகு, UPI, நெட் பேங்கிங் அல்லது கிரெடிட் கார்டு மூலம் கட்டணத்தை செலுத்தலாம்.

விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டதும் ஒரு SRN எண் வழங்கப்படும். இதன் மூலம் விண்ணப்பத்தின் நிலையை கண்காணிக்கலாம். பொதுவாக 5 முதல் 7 நாட்களுக்குள் ஆதார் PVC கார்டு உங்கள் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்.

Related News

Latest News