கச்சா எண்ணெய் விலை சரிவு: பெட்ரோல், டீசல் விலை குறையுமா? மத்திய அரசு கொடுத்த அதிரடி அப்டேட்!

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறையத் தொடங்கியுள்ள நிலையில், உலக சந்தை நிலவரத்துக்கு ஏற்ப பெட்ரோல் மற்றும் டீசல் சில்லறை விற்பனை விலைகள் தொடர்பாக முடிவுகள் எடுக்கப்படும் என்று மத்திய பெட்ரோலிய அமைச்சகம் தெரிவித்துள்ளது. சமீபத்தில் மேற்கு ஆசியாவில் ஏற்பட்ட பதற்றம் காரணமாக கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு 120 அமெரிக்க டாலர் வரை உயர்ந்திருந்தது. தற்போது அந்த விலை குறைந்து வருவதாக அமைச்சகத்தின் இணைச் செயலாளர் சுஜாதா ஷர்மா தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், உலக எரிசக்தி சந்தையில் ஏற்படும் மாற்றங்களை அரசு தொடர்ந்து கவனித்து வருவதாக கூறினார். கச்சா எண்ணெய் விலை குறைவதால் எண்ணெய் நிறுவனங்களின் லாபம் அதிகரித்து, அதன் தாக்கமாக உள்நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளில் மாற்றம் ஏற்படுமா என்ற கேள்விக்கு, சர்வதேச சூழ்நிலைக்கு ஏற்ப தகுந்த முடிவுகள் எடுக்கப்படும் என பதிலளித்தார்.

இந்தியா எந்த ஒரு நாட்டை மட்டும் சார்ந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதில்லை என்றும், 40-க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து வணிக மற்றும் செயல்பாட்டு தேவைகளின் அடிப்படையில் கொள்முதல் செய்து வருவதாகவும் அவர் கூறினார். கச்சா எண்ணெயின் விலை, தரம், சுத்திகரிப்பு சாத்தியம் மற்றும் தடையற்ற விநியோகம் போன்ற அம்சங்களை கருத்தில் கொண்டு எண்ணெய் நிறுவனங்கள் கொள்முதல் செய்கின்றன என்றார்.

மேற்கு ஆசிய நெருக்கடி காலத்திலும் நாட்டில் எரிபொருள் மற்றும் எரிவாயு விநியோகம் பாதிக்கப்படவில்லை என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த மூன்று நாட்களில் 1.47 கோடி எல்பிஜி சிலிண்டர்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. மேலும், மார்ச் மாதம் முதல் இதுவரை 10.02 லட்சம் வீடுகளுக்கு குழாய் வழி இயற்கை எரிவாயு (PNG) இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. வளைகுடா பிராந்தியத்தில் சமீபத்திய புவிசார் அரசியல் மாற்றங்களுக்குப் பிறகும், கப்பல் போக்குவரத்து மற்றும் எரிசக்தி விநியோகம் சீராக உள்ளதா என்பதை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

Related News

Latest News