தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு, முந்தைய திமுக அரசின் முக்கியத் திட்டங்களில் ஒன்றாகக் கருதப்பட்ட ‘நான் முதல்வன்’ திட்டத்தின் பெயர் தற்போது ‘திறன் தமிழ்நாடு’ (TN Skill) என மாற்றப்பட்டுள்ளது. இந்த மாற்றம் கல்வி மற்றும் திறன் மேம்பாட்டு துறையில் கவனத்தை ஈர்த்துள்ளது.
தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் கீழ் 2022ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ‘நான் முதல்வன்’ திட்டம், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் கல்வித் திறன், தொழில்நுட்ப அறிவு மற்றும் வேலைவாய்ப்பு திறன்களை மேம்படுத்தும் நோக்கத்துடன் அறிமுகப்படுத்தப்பட்டது. மாணவர்களுக்கு தொழில் வழிகாட்டுதல், திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள், போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சிகள், தொழில் துறை சார்ந்த சான்றிதழ் படிப்புகள் மற்றும் வேலைவாய்ப்பு முகாம்கள் போன்ற பல்வேறு சேவைகள் இந்தத் திட்டத்தின் மூலம் வழங்கப்பட்டு வந்தன.
மாணவர்களின் எதிர்கால வேலைவாய்ப்பு வாய்ப்புகளை அதிகரிப்பதற்கும், தொழில் துறையின் தேவைகளுக்கு ஏற்ப அவர்களைத் தயார்படுத்துவதற்கும் இந்தத் திட்டம் முக்கிய பங்காற்றியது. மாநிலம் முழுவதும் லட்சக்கணக்கான மாணவர்கள் இதன் மூலம் பயனடைந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், தற்போது திட்டத்தின் பெயர் ‘திறன் தமிழ்நாடு’ என மாற்றப்பட்டுள்ளது. அதோடு, ‘நான் முதல்வன்’ திட்டம் தொடர்பாக சமூக வலைதளங்களில் மற்றும் அதிகாரப்பூர்வ தளங்களில் பதிவிடப்பட்டிருந்த பழைய பதிவுகள் மற்றும் வீடியோக்கள் நீக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது மே 15ஆம் தேதிக்குப் பிறகு பதிவிடப்பட்ட தகவல்கள் மட்டுமே காணப்படுவதாக கூறப்படுகிறது.
எனினும், திட்டத்தின் அடிப்படை நோக்கங்களிலும், மாணவர்களுக்கு வழங்கப்படும் சேவைகளிலும் எந்த மாற்றமும் இல்லை என தெரிவிக்கப்படுகிறது. தொழில் வழிகாட்டுதல், இலவச திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள், போட்டித் தேர்வுப் பயிற்சிகள் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான சேவைகள் தொடர்ந்து ‘திறன் தமிழ்நாடு’ திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
