PF சந்தாதாரர்களுக்கு குட்நியூஸ்… இனி UPI மூலம் நேரடியாக பணம் எடுக்கலாம்!!

இந்தியாவில் கோடிக்கணக்கான பிஎஃப் (PF) சந்தாதாரர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. பிஎஃப் கணக்கில் உள்ள பணத்தை இனி யுபிஐ (UPI) மற்றும் ஏடிஎம் கார்டுகள் மூலம் நேரடியாக எடுக்கும் புதிய வசதியை அறிமுகப்படுத்துவதற்கான இறுதிக்கட்ட பணிகளில் இபிஎஃப்ஓ (EPFO) மற்றும் மத்திய தொழிலாளர் அமைச்சகம் ஈடுபட்டு வருகின்றன.

‘EPFO 3.0’ திட்டத்தின் கீழ் புதிய சர்வர் அமைப்பு முழுமையாக செயல்பாட்டுக்கு வந்த பிறகு, தகுதியுள்ள உறுப்பினர்கள் தங்களின் ஆதார் மற்றும் வங்கி கணக்குடன் இணைக்கப்பட்ட யுபிஐ ஐடி அல்லது ஏடிஎம் கார்டைப் பயன்படுத்தி நேரடியாக பிஎஃப் பணத்தை பெற முடியும். இதனால் விண்ணப்பித்து வாரக்கணக்கில் காத்திருக்க வேண்டிய அவசியம் குறையும். இந்த வசதி விரைவில் நடைமுறைக்கு வரலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

சமீபத்தில் மத்திய தொழிலாளர் அமைச்சகமும் இபிஎஃப்ஓ அமைப்பும் இணைந்து நடத்திய சோதனை ஓட்டம் வெற்றிகரமாக முடிந்ததாக கூறப்படுகிறது. இதனால் புதிய சேவை அனைத்து சந்தாதாரர்களுக்கும் விரைவில் விரிவுபடுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய விதிமுறைகளின்படி, சந்தாதாரர்கள் தங்களது மொத்த பிஎஃப் சேமிப்பில் 50% முதல் 75% வரை மட்டுமே இந்த முறையில் எடுக்க அனுமதிக்கப்படலாம். குறைந்தபட்சம் 25% தொகை கணக்கில் தொடர்ந்து வைத்திருக்க வேண்டும். ஓய்வுக்கால நிதி பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இந்த தொகைக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட உள்ளது.

மேலும், EPFO 3.0 மூலம் ரூ.5 லட்சம் வரையிலான பிஎஃப் அட்வான்ஸ் கோரிக்கைகள் தானியங்கி முறையில் விரைவாக செயல்படுத்தப்படும். இதனால் அதிகாரிகளின் ஆய்வு மற்றும் அனுமதிக்காக நீண்ட நாட்கள் காத்திருக்க வேண்டிய நிலை குறைந்து, தகுதியான உறுப்பினர்கள் விரைவாக நிதியைப் பெறும் வசதி கிடைக்கும்.

Related News

Latest News