‘மொபைல் ஆப் மூலம் முன்பதிவு’… மொத்தமாக மாறப்போகும் அரசு மருத்துவமனை!

அரசு மருத்துவமனை என்றாலே நம் நினைவுக்கு முதலில் வருவது அந்த நீண்ட நெடிய வரிசையும், மணிக்கணக்கான காத்திருப்பும்தான். குறிப்பாகத் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு வருவதால், சுட்டெரிக்கும் வெயிலில் நோயாளிகளும் அவர்களுடன் வருபவர்களும் படும் அவதி சொல்லில் அடங்காது. ஆனால், இந்த அவதிக்கு விரைவில் ஒரு முற்றுப்புள்ளி வைக்கத் தயாராகிவிட்டது தமிழக அரசு.

ஆம், தனியார் மருத்துவமனைகளுக்கு நிகராக இனி அரசு மருத்துவமனைகளிலும் ‘மொபைல் ஆப்’ மூலம் டோக்கன் முன்பதிவு செய்யும் அதிநவீன வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. சுகாதாரத் துறை அமைச்சர் அருண்ராஜ் தலைமையில் சென்னையில் நடைபெற்ற உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தில், இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக ஒரு பிரத்யேக மொபைல் செயலியைத் தனியார் தொழில்நுட்ப நிறுவனத்துடன் இணைந்து அரசு உருவாக்க உள்ளது.

இதன் மூலம் பொதுமக்கள் தங்களின் அடையாளச் சான்றுகளைப் பயன்படுத்தி, வீட்டிலிருந்தபடியே டோக்கன் முன்பதிவு செய்து கொள்ளலாம். தினமும் காலை 5 மணி முதல் மதியம் 2 மணி வரை இந்த முன்பதிவு வசதி செயல்படும். இதில் இருக்கும் சிறப்பம்சமே, நீங்கள் முன்பதிவு செய்ததும் உங்களுக்கு ஒரு குறிப்பிட்ட நேரம் ஒதுக்கப்படும்.

அந்த நேரத்திற்கு மட்டும் நீங்கள் மருத்துவமனைக்குச் சென்றால் போதும், நீண்ட வரிசையில் நிற்காமல் நேரடியாக மருத்துவரைச் சந்தித்துச் சிகிச்சை பெற முடியும். முதற்கட்டமாகத் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் இந்த வசதி விரைவில் பயன்பாட்டுக்கு வர இருக்கிறது. இது ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்குக் கால விரயத்தைத் தவிர்ப்பதுடன், மருத்துவமனை மீதான நம்பிக்கையை மேலும் அதிகரிக்கும்.

செயலி மட்டுமல்லாமல், மருத்துவமனையின் தரத்தை உயர்த்த ‘நோயாளிகள் அனுபவக் கமிட்டி’ என்ற ஒரு புதிய குழுவையும் அமைச்சர் அறிவித்துள்ளார். இந்தக் குழு வாரம் ஒருமுறை கூடி, மருத்துவமனையில் குடிநீர் வசதி, கழிவறை சுகாதாரம் மற்றும் நோயாளிகள் சந்திக்கும் பிரச்சனைகளை ஆய்வு செய்து உடனடி நடவடிக்கை எடுக்கும். அதுமட்டுமல்லாமல், காலியாக உள்ள மருத்துவர் மற்றும் செவிலியர் பணியிடங்களை விரைந்து நிரப்பவும், மின்தடை ஏற்படாமல் தடுக்க மின்வாரியத்துடன் இணைந்து ஒரு ஒருங்கிணைப்புக் குழுவை அமைக்கவும் அரசு திட்டமிட்டுள்ளது.

அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை தரம் ஏற்கனவே சிறப்பாக இருக்கும் நிலையில், இப்போது நிர்வாக ரீதியாகவும் தொழில்நுட்ப ரீதியாகவும் எடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கைகள், தமிழக பொதுச்சுகாதாரத் துறையை அடுத்தக் கட்டத்திற்கு நகர்த்திச் சென்றுள்ளது.

Related News

Latest News