கர்நாடக மாநிலம் முழுவதும் உள்ள வாகன உரிமையாளர்களுக்கு ஒரு முக்கியமான செய்தியை கர்நாடக அரசு வெளியிட்டுள்ளது. அதாவது நிலுவையில் உள்ள போக்குவரத்து அபராதங்களைச் செலுத்துவதற்கான 50% தள்ளுபடி திட்டத்தை கர்நாடக அரசு மீண்டும் அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ உத்தரவு ஜூன் 04 பிறப்பிக்கப்பட்டது.இத்திட்டம் ஆயிரக்கணக்கான வாகன ஓட்டிகளுக்குப் பயனளிப்பதோடு, பல்வேறு துறைகளின் கீழ் நிலுவையில் உள்ள பழைய போக்குவரத்து அபராதத் தொகைகளை வசூலிக்கும் நடைமுறையைச் சீரமைக்கவும் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த 50% தள்ளுபடி திட்டமானது காவல் துறையின் e-challan அமைப்பில் மே 2026-க்கு முன் பதிவு செய்யப்பட்ட நிலுவை வழக்குகள் மற்றும் 1991 மற்றும் 2022-க்கு இடைப்பட்ட காலத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளுக்காகப் போக்குவரத்துத் துறையால் விதிக்கப்பட்ட நிலுவை அபராதங்களும் இதில் அடங்கும்.
அரசு உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ள தகுதியான நிலுவை போக்குவரத்து விதிமீறல் வழக்குகளுக்கு மட்டுமே இந்தத் தள்ளுபடி பொருந்தும். குறிப்பிட்ட கால வரம்பிற்குள் நிலுவையில் உள்ள சலான் அல்லது போக்குவரத்து தொடர்பான அபராதங்களைக் கொண்ட வாகன உரிமையாளர்கள், அறிவிக்கப்பட்ட கால அவகாசத்திற்குள் இந்தச் சலுகையைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
போக்குவரத்து காவல் நிலையத்திலோ அல்லது பெங்களூருவின் போக்குவரத்து மேலாண்மை மையத்திலோ அபராதத் தொகையைச் செலுத்தலாம். கூடுதல் வசதிக்காக, இணையம் வாயிலாகச் செலுத்தும் வசதிகளும் உள்ளன. Karnataka One இணையதளம் மற்றும் Asram மற்றும் KSPS ஆகிய மொபைல் செயலிகள் மூலமாகவும் நிலுவைத் தொகையைச் செலுத்தலாம் என்று அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.நீண்ட காலமாக நிலுவையில் உள்ள போக்குவரத்து அபராத வழக்குகளை மக்கள் தீர்த்துக்கொள்ள உதவுவதே இந்த நடவடிக்கையின் நோக்கம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்
