நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் ‘சிக்மா’ திரைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. சந்தீப் கிஷன் ஹீரோவாக நடித்துள்ள இந்த படம் ஜூலை 31-ம் தேதி வெளியாக உள்ள நிலையில், படத்தின் முதல் பாடலான ‘சிக்மா ஸ்டைல்’ தற்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.இந்த பாடல் வீடியோவில் ஹீரோ சந்தீப் கிஷனுடன் இயக்குநர் ஜேசன் சஞ்சயும் நடனமாடியுள்ளார். பொதுவாக கேமராவுக்கு பின்னால் இருக்க விரும்பும் ஜேசன், இந்த முறை நேரடியாக திரையில் தோன்றியிருப்பது ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது.
இந்த பாடலில் இடம்பெற்றுள்ள சில வரிகள்தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. தகுதி தரம் பார்த்து பேசுறது இல்ல மாரல்…, பதவி மேல ஆசை இல்லை…, பொருள் பத்து விரல் என்ற வரிகள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.அதுமட்டுமல்லாமல், வழி தனி வழி…, அந்த ஆண்டவன் என் பக்கம்… போன்ற வரிகளையும் ரசிகர்கள் தனியாக பகிர்ந்து வருகின்றனர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிரபல பன்ச் வசனங்களை நினைவுபடுத்தும் வகையில் இந்த வரிகள் இருப்பதால் சிலர் ஜேசன் ரஜினி ரசிகரா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.ஏற்கனவே விஜய்யும் சினிமாவுக்கு வந்த ஆரம்ப காலகட்டத்தில் தான் ரஜினி ரசிகர் என்றும் அவரை பார்த்து தான் நடிக்க வேண்டும் என்று ஆசை வந்ததாகவும் சொல்லி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பாடல் வெளியானதும் இயக்குநர் ஷங்கரின் மகன் அர்ஜித், நடிகர் விக்ரமின் மகன் த்ருவ் உள்ளிட்டோர் சமூக வலைதளங்களில் ஜேசன் சஞ்சயை வாழ்த்தியுள்ளனர். இது வெறும் ஆரம்பம் தான் என்று துருவ் பதிவிட்டது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
