தமிழ் சினிமாவில் நடிகர்களின் அரசியல் வருகை குறித்து எப்போது பேச்சு எழுந்தாலும் அது மிகப்பெரிய விவாதமாக மாறுவது வழக்கமாக பார்க்கப்படுகிறது . எம்ஜிஆர், ஜெயலலிதா, விஜயகாந்த் போன்றவர்களை தொடர்ந்து சமீப காலங்களில் நடிகர் விஜய் அரசியல் கட்சியை தொடங்கி தீவிர அரசியலில் இறங்கிய பிறகு, மற்ற முன்னணி நடிகர்களின் பெயர்களும் அடிக்கடி அரசியல் விவாதங்களில் இழுக்கப்பட்டு வருகின்றன.அந்த வகையில் தற்போது நடிகர் தனுஷின் பெயர் சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
சமீபத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜாவிடம் அரசியல் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். என் மகன்களோ, பேரன்களோகூட அரசியலுக்கு வரலாம் என்றும் ,சென்னையில் மிகவும் பவர்ஃபுல்லான இடம் கோபாலபுரம், கலைஞர் வாழ்ந்த அந்த இடம் ஒளி பிறந்த இடம் என்று கூறியிருந்தார். இந்த பேச்சு அரசியல் ரீதியாகவும் அனைவரது கவனத்தை ஈர்த்தது
கஸ்தூரி ராஜாவின் இந்த கருத்துக்கள் வெளியான சில மணி நேரங்களிலேயே, தனுஷுக்கு அரசியல் ஆசை இருக்கிறதா ? என்ற கேள்விகள் இணையத்தில் பரவத் தொடங்கின.இந்த சூழ்நிலையில் பிரபல திரை விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தனது எக்ஸ் தள பதிவில் தனது கிண்டலான பாணியில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதில் சில ஆண்டுகளாக வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டை, ருத்திராட்சை கொட்டை, ப்ரோமோ மேடைகளில் பூமர் தத்துவங்கள், அனுதாபம் தேடும் சென்ட்டிமென்ட் கதைகள் என அரசியலுக்கு தயாராகிவிட்டார் சுள்ளான். இப்போது விஜய் வென்றதால் அடுத்து மக்கள் தன்னையும் முதல்வர் ஆக்குவார்கள் என நம்புகிறார்” என்று பதிவிட்டிருந்தார்
இந்த பதிவு வெளியாகிய சில நிமிடங்களிலேயே ப்ளூ சட்டை மாறனின் ரசிகர்கள் இந்த பதிவை வைரலாக்க, தனுஷ் ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவிக்க ஆரம்பித்தனர்.குறிப்பாக தனுஷ் எப்போது அரசியலுக்கு வருவதாக சொன்னார் என்றும், அவரது தந்தை பொதுவாக சொன்ன கருத்தை வைத்து ஏன் தனுஷை தாக்க வேண்டும் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
