ஜனநாயகன் ரிலீஸ் எப்போது? பொடி வைத்த ஹெச். வினோத்

விஜய் நடித்த தலைவா, காவலன் உள்ளிட்ட பல படங்களுக்கு அரசியல் ரீதியான அழுத்தம் வந்திருக்கிறது. ஜனநாயகன் படத்துக்கும் அதே நிலைமைதான். சென்ற முறையெல்லாம் அரசியல் தொடர்பான வாடை அவரது படங்களில் அடித்தால் குடைச்சல் கொடுக்கப்பட்டது. இப்போதோ அவரது அரசியல் வருகையே நடந்துவிட்டது. எனில் அழுத்தமும், குடைச்சலும் இல்லாமலா இருக்கும். அனைத்தையும் எதிர்பார்த்தே இந்தப் படத்தில் கமிட்டானார் விஜய். அதனை அவரும் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ஓபனாக சொல்லிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில்கூட திரைப்பட துறை அமைச்சர் ராஜ்மோகன் செய்தியாளர்களை சந்தித்தார். அதற்கும் முன்னதாக தயாரிப்பாளர் திருச்செந்தூரில் வைத்து செய்தியாளர்களை சந்தித்தார். இரண்டு பேருமே, படத்தின் ரிலீஸ் விரைவில் நடக்கும் என பட்டும் படாமலே பேசிவிட்டு சென்றார்கள். இப்படி ரிலீஸுக்கு இன்னமும் படம் முட்டிக்கொண்டிருக்க; டைட்டில் கார்டில் முதலமைச்சர் விஜய் என்று வருமா இல்லை தளபதி விஜய் என்று வருமா என்ற ஆராய்ச்சியில் விர்ச்சுவல் வாரியர்ஸ் இறங்கியிருக்கிறார்கள்.இந்த விஷயத்தில் இயக்குநர் ஹெச்.வினோத்தை பொறுத்தவரை ஆரம்பத்திலிருந்தே சைலெண்ட் மோடில்தான் இருக்கிறார். படம் லீக்கானபோது கூட, ஆதங்கத்தோடு ஒரு பதிவை போட்டுவிட்டு அமைதியாகிக்கொண்டார்

ஜனவரி மாதமே ரிலீஸாகியிருந்திருக்க வேண்டிய படம் பல பிரச்னைகளை சந்தித்து தியேட்டரில் ரிலீஸாவதற்கு முன்னரே இணையத்திலும் லீக்காகிவிட்டது. இப்போது விஜய் முதலமைச்சராகிவிட்டதால் படம் ரிலீஸாவிருப்பதில் பிரச்னை வராது என்று கருதப்படும் சூழலில், இந்நிலையில் பாண்டிராஜ் இயக்கியிருக்கும் பரிமளா&கோ திரைப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இயக்குநர் ஹெச். வினோத் பட ரிலீஸ் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “ஜனநாயகன் விஷயம் எதுவும் நம் கையில் இல்லை. எனக்கு எல்ல உண்மைகளையும் சொல்ல தைரியம் இல்லை. நான் சொன்னால் அதை போடுவதற்கு உரிய தைரியமும் உங்களுக்கு இல்லை” என பொடி வைத்து பேசியிருக்கிறார்.

Related News

Latest News