தமிழ் சினிமாவில் குறுகிய காலத்திலேயே தனித்துவமான நடிப்பாலும், கம்பீரமான குரலாலும் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் நடிகர் அர்ஜுன் தாஸ் . ‘கைதி’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமான அவர், பின்னர் ‘மாஸ்டர்’, ‘விக்ரம்’, ‘குட் பேட் அக்லி’ உள்ளிட்ட பல படங்களில் வில்லன் மற்றும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தார். குறிப்பாக அவரது தடிமனான, மிரட்டலான பேஸ் குரல் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது.
‘கைதி’ திரைப்படத்தில் சிறந்த வில்லன் கதாபாத்திரத்தில் நடித்ததற்காக தமிழக அரசின் சிறந்த வில்லன் நடிகர் விருதையும், பல்வேறு சினிமா விருதுகளையும் அவர் பெற்றுள்ளார். மேலும் தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் உடன் இணைந்து ‘ஓஜி’ திரைப்படத்திலும் நடித்துள்ளார்.
தற்போது, பவர் ஹவுஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கான் சிட்டி’ திரைப்படத்தில் அர்ஜுன் தாஸ் நடித்துள்ளார். இப்படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், படம் ஜூன் 26-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இதற்கிடையில், அர்ஜுன் தாஸின் திருமணம் குறித்த தகவல்கள் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. தகவல்களின் படி, இந்த வாரம் நடைபெறும் தனிப்பட்ட விழாவில் அவர் நிச்சயதார்த்தம் செய்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிகழ்ச்சி நெருங்கிய குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் மட்டுமே நடைபெறும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சில மாதங்களுக்கு முன்பு அவர் ஒரு நடிகையை காதலித்து வருவதாக செய்திகள் வெளியான நிலையில், தற்போது திருமண தகவல் வெளியாகியிருப்பது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் சமூக வலைத்தளங்களில் மணப்பெண் அந்த நடிகையா என்ற கேள்வியும் எழுந்து வருகிறது.
