வெற்றிமாறன் இயக்கத்தில், சிலம்பரசன் நடித்து வரும் புதிய திரைப்படம் ‘அரசன்’ தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. வடசென்னையை மையமாகக் கொண்டு உருவாகும் இந்த கேங்ஸ்டர் திரைப்படம் விறுவிறுப்பான கதை மற்றும் நட்சத்திர பட்டாளத்தால் கவனம் ஈர்த்துள்ளது.
இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, சமுத்திரக்கனி, கிஷோர், பிரியங்கா மோகன், யோகி பாபு, ஆண்ட்ரியா ஜெரெமையா மற்றும் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துவருகின்றனர். கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கிறார்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இப்படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டு தீவிரமாக பணியாற்றி வருகிறது. தற்போது சென்னை ECR கடற்கரைப் பகுதியில் பிரம்மாண்டமான ‘வடசென்னை’ செட் அமைக்கப்பட்டு அதில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. குறிப்பாக சிம்பு, விஜய் சேதுபதி மற்றும் இயக்குநர் அமீர் இணைந்து நடிக்கும் காட்சிகள் மிகுந்த பரபரப்புடன் எடுக்கப்பட்டு வருகின்றன. இதற்கு முன் பிரியங்கா மோகன் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், இந்தப் படத்தில் சிம்பு இரட்டை வேடத்தில் அல்லாமல், மூன்று வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிப்பதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. ராஜன், அரசன் மற்றும் அன்பு என மூன்று வேடங்களில் அவர் தோன்றுவதாக கூறப்படுகிறது. இதனால் இந்த ஆண்டு தீபாவளி, சிம்பு ரசிகர்களுக்கு மிகப்பெரிய திரை விருந்தாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
