தமிழ் சினிமாவில் தனித்துவமான நகைச்சுவை நடிப்பால் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் முத்துக்காளை. பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ள அவர், குறிப்பாக வடிவேலு உடன் நடித்த நகைச்சுவை காட்சிகள் மூலம் பெரும் வரவேற்பைப் பெற்றார். விஜய், அஜித் குமார் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களிலும் அவர் நடித்துள்ளார்.
இந்நிலையில், நடிகர் முத்துக்காளை தனது மனைவி மாதியின் உடல்நிலை குறித்து உருக்கமான வேண்டுகோளை வெளியிட்டுள்ளார். மூளையில் ஏற்பட்ட ரத்தக் கசிவு காரணமாக, சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அவரது மனைவிக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. அறுவை சிகிச்சைக்குப் பிறகு ஏற்பட்ட நோய் தொற்று காரணமாக, கடந்த 17 நாட்களாக அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும், சுவாசிக்க கடுமையாக சிரமப்படுவதால் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், தனது மனைவிக்கு உரிய மேம்பட்ட மருத்துவ சிகிச்சை கிடைக்க அரசு உதவி செய்ய வேண்டும் என்று நடிகர் முத்துக்காளை உணர்ச்சிபூர்வமாக கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அதில், “என் மனைவியின் உயிரைக் காப்பாற்றுங்கள்” என்று கண்கலங்கியபடி அவர் முதலமைச்சர் விஜயிடம் உதவி கோரியுள்ளார். இந்த சம்பவம் ரசிகர்கள் மற்றும் திரையுலகினரிடையே பெரும் பரிதாபத்தையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.
