போயஸ் கார்டன் டூ ‘பனையூர்’ – யார் ‘இந்த’ ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேல்?

தமிழக முதல்வரின் சிறப்பு அரசியல் செயலாளர் என்கிற பதவியில் தவெகவின் செய்தி தொடர்பாளரும், முதல்வர் விஜய்யின் ஜோதிடருமான ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேல் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதனால் இவர் குறித்த தேடல்கள் இணையத்தில் அதிகரித்துள்ளன. அந்தவகையில் இவரின் பின்னணி குறித்து பார்க்கலாம்.

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி தான் இவருடைய சொந்த ஊர். அந்த பகுதியில் ஜோதிடம் பார்த்து வந்த இவருக்கு ஈரோடு முத்துச்சாமியின் அறிமுகம் கிடைத்தது. அதை கெட்டியாக பிடித்துக்கொண்டு போயஸ் கார்டனுக்குள் அடியெடுத்து வைத்தார். அங்கு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் சசிகலா ஆகியோரின் ஜாதகங்களை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. 2001ல் அதிமுக ஆட்சியை பிடித்ததால் போயஸ் கார்டனில் இவருக்கு ஏகப்பட்ட செல்வாக்கு கிடைத்தது.

இடையில் அதிமுகவின் அடுத்த தலைமை குறித்து இவர் சொன்ன விஷயங்கள் கோபமூட்டியதால், ஆத்திரமடைந்த சசிகலா இவரை போயஸ் கார்டனை விட்டு வெளியேற்றினார். இதனால் வருத்தத்தில் டெல்லிக்கு சென்ற இவருக்கு அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, சரத் பவார் போன்ற அரசியல் தலைவர்களுக்கு ஜாதகம் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. பின்னர் அங்கும் சூழ்நிலைகள் சரியில்லாததால், சிங்கப்பூருக்கு சென்று ஜோதிட நிறுவனம் ஒன்றை தொடங்கினார்.

சிங்கப்பூரில் இருந்துகொண்டே தமிழகத்தின் விஐபி-க்கள் பலருக்கும் ஆன்லைன் வழியாக ஜோதிடம் பார்க்க ஆரம்பித்தார். இதைவைத்து திமுக தலைவர் ஸ்டாலினின் மனைவி துர்காவையும் ஒருமுறை சந்திக்க முயன்றார். அந்த முயற்சி கைகூடவில்லை. அப்போதுதான் விஜய் அரசியலுக்கு வரும் யோசனையில் இருப்பதாக தெரியவே, அவரை சந்தித்தார். 2020ம் ஆண்டு கால கட்டத்தில் விஜயுடன் இவருக்கு ஏற்பட்ட தொடர்பு, இப்போது அரசுப்பணியில் வந்து முடிந்திருக்கிறது.

Related News

Latest News